×

பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை சீனா எல்லை அருகே அதிநவீன பீரங்கிகளை நிறுத்தியது இந்தியா: மைனஸ் 40 டிகிரி குளிரையும் தாக்கு பிடிக்கும்

புதுடெல்லி: லடாக் விவகாரத்தில் 6 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், வரும் குளிர்காலத்தை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராகி விட்டது. சீன எல்லையை ஒட்டி சக்தி வாய்ந்த பீரங்கிகள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம், மைனஸ் 40 டிகிரி குளிரிலும் கூட தாக்குதல் நடத்த முடியும். லடாக் சீன எல்லையில் கடந்த 5 மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இங்கு பலமுறை சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றதை இந்திய ராணுவம் தடுத்துள்ளது. வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு சீன ராணுவத்தை விரட்டியது. இதனால், 45 ஆண்டுகளுக்குப் பிறகு சீன எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் துப்பாக்கி குண்டு சத்தங்கள் கேட்கத் தொடங்கி உள்ளன. அங்கு பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவ தரப்பில் 6 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்த பேச்சுவார்த்தையால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முதலில் எல்லையில் அத்துமீறியது சீனா என்பதால் அதன் படைகளை வாபஸ் பெற்றால் மட்டுமே இந்திய படைகள் பின்வாங்கப்படும் என்பதில் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது. இந்நிலையில், லடாக் எல்லையில் அடுத்த மாதம் குளிர்காலம் தொடங்குகிறது. ஏற்கனவே, கரகோணம் மற்றும் கைலாஷ் பிராந்தியத்தில் குளிர் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. 14,500 அடி உயரத்தில் உள்ள லடாக்கின் கிழக்குப் பகுதியில் குளிர் காலத்தில் மைனஸ் 40 டிகிரி வரை கடும் குளிர் நிலவும். அந்த சூழலை சமாளிக்க இப்போதே இந்திய ராணுவம் தயாராகி விட்டது.

தற்போது, லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்தினர் தலா 50 ஆயிரம் வீரர்களை குவிக்கப்பட்டுள்ளனர். இங்கு, தற்போது, டி 90 மற்றும் டி 72 டேங்குகளையும், பிஎம்பி-2 ரக பீரங்கிகளையும் இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது. இந்த பீரங்கிகளை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் குளிரிலும் கூட இயக்க முடியும். இதுதவிர, இந்திய ஆயுதப் படைகள், இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை விரைவில் செல்லும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, புதிதாக 13 இந்திய நிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எல்லையில் பீரங்கிகளை நிலைநிறுத்தி உள்ள வீடியோக்கள் ராணுவ தரப்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், சீன ராணுவமும் பாங்காங் திசோ ஏரியின் பிங்கர் பகுதியில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

* கடினமான பகுதியில் முழு கண்காணிப்பு
ராணுவ மேஜர் ஜெனரல் அர்விந்த் கபூர் அளித்த பேட்டியில், ‘‘கடினமான மலைப்பிராந்திய எல்லையில், இயந்திரமாக்கப்பட்ட படைகளை இந்தியா நிறுத்தியுள்ளது. உலகிலேயே இதுபோன்ற உயரமான சவாலான பகுதிகளில் பீரங்கிகளை நிறுத்தியிருக்கும் ஒரே ராணுவம் இந்தியா மட்டுமே. இந்த பகுதியில் பீரங்கிகள், துப்பாக்கிகளை பராமரிப்பது என்பது சவாலான விஷயம். இந்த குளிர்காலம், லடாக்கில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என்பது மறுக்க முடியாதது. அதை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன,’’ என்றார்.

* பாங்காங் திசோவில் இன்டர்நெட் வசதி
பாங்காங் திசோ ஏரிப் பகுதியில் மொத்தம் 8 பிங்கர் பகுதிகள் உள்ளன. இவற்றில் 4 பகுதிகளை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. 6 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், இங்கிருந்து தனது ராணுவத்தை வாபஸ் பெற சீனா மறுத்து வருகிறது. அதோடு, அந்த பகுதிகளில் நிரந்தர கட்டுமானப் பணிகளையும் செய்து வருகிறது.இந்நிலையில், இப்பகுதிகளில் தனது ராணுவத்துக்கு இணைய தள சேவையை கொண்டு வரும் வகையில், ஆப்டிக்கல் பைபர் அமைக்கும் பணிகளையும் சீனா வேகமாக செய்து வருவதாக கூறப்படுகிறது.


Tags : India ,talks ,China , No progress in talks China stops sophisticated artillery near border India: Can withstand minus 40 degree cold
× RELATED சொல்லிட்டாங்க…