ஊராட்சி மன்ற தலைவர் கொலைக்கு பழிக்கு பழி அதிமுக பிரமுகர் வெட்டி கொலை: தலை துண்டித்து சாலையோரம் வீச்சு; 9 ஆண்டுகள் காத்திருந்து கொன்றனர்

சென்னை: ஊராட்சி மன்ற தலைவரை கொன்றுவிட்டு தலைமறைவான அதிமுக பிரமுகரை பட்டப்பகலில் கூலிப்படை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்தது. செங்கல்பட்டு அடுத்த செல்வி நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (45) இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். பொன்விளைந்த களத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் விஜயகுமார் 2012ல் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 வருடங்களாக சென்னையில் தலைமறைவாக இருந்து வந்தார். 2 மாதம் முன்பு அதிமுகவில் இணைந்து பொன்விளைந்த களத்தூர் செல்வி நகர் பகுதி நிர்வாகியாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அவரது நண்பர் சக்கரவர்த்தி என்பவர் செல்வி நகரில் கட்டியுள்ள வீட்டை பார்க்க சேகர், டூ வீலரில் வந்துள்ளார். சக்கரவர்த்தி, சேகர் வீட்டின் அருகே பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது 4 பைக்கில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், சேகரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சேகர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் சேகரின் தலையை துண்டாக வெட்டி எடுத்த கொலையாளிகள் சாலையோரமாக வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். தகவலறிந்த செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் மற்றும் செங்கல்பட்டு தாலு்கா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

6 பேர் சரண்: சேகர் கொலை தொடர்பாக சுரேஷ், மகேஷ், மொய்தீன், பாபு, மணிகண்டன், கவுதம் ஆகிய 6 பேர் செங்கல்பட்டு டவுன் ஸ்டேஷனில் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், 2012ம் ஆண்டு பொன்விளைந்த களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில்  சேகர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக 9 ஆண்டுகள் காத்திருந்த விஜயகுமாரின் தம்பி சுரேஷ் கூலி படையை வைத்து சேகரை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

* நான்காவது கொலை

செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக 2வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜயகுமார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான குப்பன், தோல்வியடைந்தார். இதனால் வெற்றி பெற்ற விஜயகுமாரை தூத்துக்குடியை சேர்ந்த கூலிப்படையை வைத்து 2012ல் செங்கல்பட்டில் குப்பன் தரப்பு வெட்டி கொலை செய்தது. இந்த வழக்கில் குப்பன் அவரது மகன் நித்தியானந்தம், தேமுதிக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் துரைதாஸ், புதுப்பாக்கம் சேகர், பங்க் வெங்கடேஷன், உமாபதி, ரவி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் அண்ணனை கொலை செய்தவர்களை பழிவாங்க தம்பி சுரேஷ். திட்டம் தீட்டினார். அதன்படி  2013ம் ஆண்டு மறைமலை நகரில் காரில் சென்ற குப்பனை வெட்டி கொலை செய்தார். 2014ம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் குப்பனின் மகன் நித்தியானந்தத்தை, சுரேஷ் கும்பல் வெட்டி கொலை செய்தது. 2014ம் ஆண்டு தேமுதிக பிரமுகர் துரைதாஸை பொன்விளைந்த களத்தூரில் வீட்டில் வைத்து சுரேஷ் கும்பல் வெட்டி கொலை செய்தது. தொடர்ந்து 4 கொலைகள் ஒரே ஊரில் நடந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் 8 வருடம் கழித்து சென்னையில் பதுங்கியிருந்த சேகர், பங்க் வெங்கடேஷன் ஆகியோர் மீண்டும் ஊருக்கு திரும்பினர். அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு மீண்டும் பொன்விளைந்த களத்தூரில் வீட்டுக்கு திரும்பினர். சேகரை 4வதாக வெட்டி கொலை செய்தார் சுரேஷ்.

Related Stories:

>