×

தமிழகத்தில் தான் ஒரு நாளைக்கு 90,000 ஆர்டிபிசிஆர் பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

புதுக்கோட்டை: தமிழகத்தில் தான் ஒரு நாளைக்கு 90,000 ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் மேலூர் ஊராட்சி அம்மன்பேட்டையில் ரூ.45 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று திறந்து வைத்தார். அப்போது விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. களத்தில் நேரடியாக காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. இதில் கொரோனா அறிகுறி உடையவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து  சிறப்பான சிகிச்சை அளித்து குணப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆக்சிஜன் உற்பத்தியில் மிகை மாநிலமாக தமிழகம் திகழ்வதுடன் தேவைக்கு அதிகமான ஆக்சிஜனை அண்டை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று கிராமப்புற​ங்களில் 30 படுக்கைகள் கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 40,000 படுக்கைகள் எண்ணிக்கையில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், ஆர்டிபிசிஆர் பரிசோதனை ஒரு நாளைக்கு 90,000 எண்ணிக்கையில் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் பயனாக கொரோனா பரிசோதனையில் பிற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்றுமாறு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu , 90,000 RTPCR tests per day in Tamil Nadu alone: Minister Vijayabaskar
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...