×

கொரோனா சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் நிதி திடீர் குறைப்பு

நெல்லை: தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள் ஷிப்டு முறையில் கொரோனா வார்டுகளில் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு 7 நாள் கொரோனா வார்டில் சிகிச்சை, பின்னர் 7 நாள் தரமான ஓட்டலில் தனிமைபடுத்துதல், அதை தொடர்ந்து அடுத்த 7 நாள் அவர்களது வீட்டில் தனிமையில் இருந்து பின்னர் பணிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டனர். இந்த நடைமுறை முதலில் தொடங்கிய போது சில மருத்துவமனை நிர்வாகங்கள் நர்சுகளை மருத்துவக்கல்லூரி வளாகங்களில் உள்ள நர்சிங் விடுதியில் தங்கவைத்தனர். அங்கு பாதுகாப்பு மற்றும் உணவுமுறைகளில் குறைபாடு இருந்ததால் அவர்களையும் வெளியில் உள்ள விடுதிகளில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் கொரோனா பணி செய்யும் டாக்டர்களுக்கு வழங்கப்படும் நிதியை அரசு திடீரென குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் செலவுகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் ஆரம்பத்தில் கொரோனா பணிக்கு பின் தனிமைப்படுத்த முதல் தர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்ட டாக்டர்கள் தற்போது அதற்கு அடுத்த பட்ஜெட் நிலையில் உள்ள ஓட்டல்களில் தங்கவோ அல்லது மருத்துவக்கல்லூரி நிர்வாக விடுதியில் தங்கவோ அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து முறையிட்டபோது மருத்துமனை நிர்வாகங்கள், நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதால் வேறுவழியில்லை என கைவிரித்து விட்டன. இதனிடையே சில விடுதிகளில் வழங்கப்படும் ஓட்டல் உணவுகள் ஒத்துக்கொள்ளாததால் பல நர்ஸ்கள் ஓட்டல் ஓய்வறை மற்றும் ஓட்டல் உணவு வேண்டாம் என எழுதிகொடுத்துவிட்டு தங்கள் வீடுகளிலேயே ஒருவாரம் தனிமையில் ஓய்வு எடுத்து விட்டு பணிக்கு திரும்புகின்றனர்.

Tags : reduction ,doctors , Sudden reduction in funding for doctors treating corona
× RELATED ஐ போன் ஆர்டர் ரத்தால் மன உளைச்சல்...