×

திட்டமிட்டு தாக்குதல் நடப்பதாக கூறப்படும் நிலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் சிலை உடைப்பு: ஆந்திராவில் மீண்டும் பரபரப்பு

சித்தூர்: ஆந்திராவில் கோயில்கள் மீது திட்டமிட்டே தாக்குதல்கள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சித்தூர் அருகே உள்ள கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் சிலைகளை மர்ம ஆசாமிகள் உடைத்துள்ளனர். இது, அப்பகுதி பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இந்து கோயில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அதன்படி, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 6 கோயில்களில் சிலைகள் போன்றவை சேதப்படுத்தப்பட்டு உள்ளன.
*  கிழக்கு கோதாவரி மாவட்டம், அந்தர்வேதி லட்சுமி நரசிம்ம கோயில் தேர், மர்மமான முறையில் எரிந்து சாம்பலானது.
* விஜயவாடா கனக துர்கையம்மன் கோயில் தேரில் வெள்ளி தகடுகளால் பதிக்கப்பட்ட சிங்க சிலைகளை உடைத்து திருடிச் சென்றனர்.
* பிரகாசம் மாவட்டம், சாய்பாபா கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது.
* கர்னூல் சிவன் கோயில் நந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. - இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் ஆந்திராவில் சமீபகாலமாக தொடர்ந்து நடைபெற்று வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சித்தூர் மாவட்டத்தில் சிவன் கோயிலில் உள்ள சிலைகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கங்காதர நெல்லூர் மண்டலம்,  அகரமங்கலம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஈஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலில் காலை, மாலை நேரங்களில் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தினமும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல் பக்தர்கள் கோயிலுக்கு வழிபட சென்றனர். அப்போது, அங்கு சிவலிங்கமும் நந்தி சிலைகளும் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர்.

இது குறித்து பக்தர்கள் கங்காதர நெல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், டிஎஸ்பி ஈஸ்வர், சப்-இன்ஸ்பெக்டர் சுனில்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் பாலைய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, சிலைகளை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோயில் சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

* சிலைகளுக்கு அடியில் வைரம், வைடூரியமா?
டிஎஸ்பி ஈஸ்வர் கூறுகையில், ‘ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு சிவலிங்கம், நந்தி சிலைகளின் அடியில் தங்கம், வைரம் மற்றும் வைடூரிய நகைகள் இருப்பதாக வதந்திகள் பரவியது. இதனால், அக்கிராம மக்கள் லிங்கம், நந்தியை பாதுகாத்து வந்தனர். இதையறிந்த சில மர்ம நபர்கள், சிலையை அகற்றினால், அதன் அடியில் உள்ள ஆபரணங்களை எடுக்கலாம் என  நினைத்து நள்ளிரவில் சிலைகளை உடைத்து இருக்கலாம். சிலையின் அடியில் நகைகள் ஏதும் இல்லாததால் அவர்கள் திரும்பிச் சென்று இருக்கலாம்,’’ என்றார்.

Tags : Shiva ,Andhra Pradesh , Thousand-year-old Shiva temple statue demolished in Andhra Pradesh
× RELATED விராலிமலையில் ஜல்லிக்கட்டு நினைவு...