தீவிபத்து ஏற்பட்ட ஐசிஎப் தொழிற்சாலையில் ஆர்பிஎப் வீரர் திடீர் தற்கொலை: விசாரணைக்கு பயந்து இறந்தாரா?; போலீசார் தீவிர விசாரணை

சென்னை: சென்னை ஐசிஎப் அடுத்த நியூ ஆவடி சாலையில் ரயில்வே தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு இன்ஜின்கள், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. ரயில் பெட்டிகளுக்கு தேவையான எலக்ட்ரிக்கல் உதிரிபாகங்கள் எண் 54 என்ற சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 5000 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இந்த குடோனில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிகல் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கோடிகணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு உள்பட அதிகாரிகள் பலர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து ஐசிஎப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தீவிபத்து தொடர்பாக அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் காஜாமைதீனை (58) போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். விசாரணைக்கு பயந்த காஜாமைதீன் நேற்று காலை தீ விபத்து நடந்த இடத்தின் அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கு பணிக்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஐசிஎப் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு பயந்து காஜாமைதீன் தற்கொலை செய்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>