×

தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பிக்கு நினைவு இல்லம்: எஸ்.பி.பி.சரண் தகவல்

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, 51 நாட்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த 25ம் தேதி மதியம் 1.04 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது உடல் நேற்று முன்தினம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.பி மகனும், பாடகருமான எஸ்.பி.பி.சரண், தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பிக்கு நினைவு இல்லம் கட்டப்படும் என்றும், எஸ்.பி.பி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பொதுமக்கள் பார்வையிட போலீசாரிடம் ஆலோசித்த பிறகு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பாரத ரத்னா விருது: சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை எஸ்.பி.பி பெயரில் வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை விடுத்துள்ளார். எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இசை அமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளனர். எஸ்.பி.பிக்கு சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று, நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* இறப்பதற்கு முன்பே சிலை செய்ய ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தான் இறப்பதற்கு முன்பே தனக்கு சிலை செய்ய ஆர்டர் கொடுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஆந்திர மாநிலம் கொத்தபேட்டையை சேர்ந்த சிலை வடிவமைப்பாளர் ராஜ்குமாரிடம் பேசிய எஸ்.பி.பி., மறைந்த தனது தந்தை எஸ்.பி.சாம்பமூர்த்தி, தாய் சகுந்தலா அம்மாள் ஆகியோருக்கு சிலைகள் வடிவமைக்க ஆர்டர் கொடுத்துள்ளார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தனக்கும் ஒரு சிலை வடிவமைக்க சொல்லியிருக்கிறார். கொரோனா காரணமாக நேரில் வந்து சிலை செய்ய தேவையான போட்டோ ஷூட் நடத்த முடியாது என்பதால், அவரே சில போட்டோக்களை இமெயிலில் அனுப்பியிருக்கிறார். இதையடுத்து ராஜ்குமார் எஸ்.பி.பியின் சிலையை வடிவமைக்க தொடங்கிய நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக எஸ்.பி.பி காலமாகி விட்டார்.

Tags : SBP Memorial House , SBP Memorial House at Tamaraipakkam: SBP Charan Information
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...