×

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்: நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் தீவிரம்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் வழங்கினார். இதன் மூலம், மசோதா சட்டமாவதை தடுப்பதற்கு இருந்த ஒரே வாய்ப்பும் பறிபோனதால் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில் முதல் நாள் கூட்டத்திலேயே வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

‘இந்த மசோதாக்கள் மூலம் விளைபொருட்களை விற்பதில் விவசாயிகளுக்கு புது சுதந்திரம் கிடைக்கும். விவசாயிகள் உள்ளூர் மண்டியில் மட்டுமின்றி யாரிடம் வேண்டுமானாலும் தங்கள் விளை பொருட்களை விற்கலாம், விளைபொருள் விற்பனைக்கு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம், வெங்காயம், பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால் அதை எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்து விற்கலாம் என்பதால் நாடு முழுவதும் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்,’ என மத்திய அரசு விளக்கம் அளித்தது.

ஆனால், ‘இந்த மசோதாக்கள் விவசாயிகளை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு சமம், அவர்களை பெரு நிறுவன பணியாளர்களாக மாற்றிவிடும், அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் திருத்தத்தால் அவற்றின் விலை கடுமையாக உயரும்,’ என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதவிர, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இந்த மசோதாக்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதால் 3 மசோதாக்களையும் மத்திய அரசு எளிதாக நிறைவேற்றியது.

பின்னர், மாநிலங்களவையில் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாவை தனியாகவும், மற்ற இரு மசோதாக்களை தனியாகவும் மத்திய அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது. மாநிலங்களவையில் இம்மசோதாக்கள் தாக்கலானதும் கடும் அமளி வெடித்தது. எதிர்க்கட்சிகள் எம்பி.க்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்து, கடும் கூச்சல் குழப்பத்திற்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சி எம்பி.க்கள், நாடாளுமன்ற நடத்தை விதி புத்தகத்தை கிழித்து தங்கள் எதிர்ப்பை காட்டினர். இந்த சம்பவம் காரணமாக மூத்த எம்பி.க்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, இரு அவையிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அவை அனுப்பி வைக்கப்பட்டன. கடைசி வாய்ப்பாக  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடமும் எதிர்க்கட்சிகள் முறையிட்டன. ‘வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி நிறைவேற்றப்பட்டதால் அவற்றை மீண்டும் திருப்பி அனுப்ப வேண்டும்,’ என, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், ஜனாதிபதியிடம் மனு அளித்தனர்.

அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, விவசாயிகளும் இம்மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப்பில் தொடர் ரயில் மறியல் போராட்டங்கள் நடக்கின்றன. தமிழகம் உட்பட பல மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜ.வின் கூட்டணியிலும் இவ்விவகாரம் விரிசலை ஏற்படுத்தியது. 23 ஆண்டுகள் பாஜ.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிரோண்மணி அகாலி தளம் கட்சி. பாஜ உடனான தனது உறவை முறித்துக் கொண்டது.

இதனால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இவ்விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இந்நிலையில், 3 வேளாண் மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்று அரசிதழ் வெளியிடப்பட்டது. இதன் மூலம், 3 மசோதாக்களும் சட்டமாக அமலுக்கு வந்துள்ளன. எஞ்சியிருந்த கடைசி வாய்ப்பும் பறிபோய், சர்ச்சைக்குரிய 3 மசோதாக்களும் சட்டமாக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

* டோக்ரி, இந்தி, காஷ்மீரி அலுவல் மொழியானது
காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், அங்கு அடுத்த அதிரடி மாற்றமாக உருது, ஆங்கிலத்துடன் டோக்ரி, காஷ்மீரி, இந்தி ஆகிய மொழிகளும் அலுவல் மொழியாக மாற்றும் மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் வழங்கினார். இதன் மூலம், காஷ்மீரில் உருது, ஆங்கிலம், காஷ்மீரி, டோக்ரி, இந்தி என, அலுவல் மொழிகள் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Tags : President ,parliament ,struggle ,country , President approves agriculture bill passed in parliament amid fierce opposition: Farmers' struggle intensifies across country
× RELATED பிரதமரே மிகப்பெரிய நிதியை எப்படி திரட்ட முடியும்? :செல்வப்பெருந்தகை