தனது சிலையை முன்கூட்டியே வடிவமைக்க கொடுத்த எஸ்.பி.பி.; மரணத்தை முன்கூட்டியே கணித்து வைத்திருந்தாரா எஸ்.பி.பி.?

சென்னை: மரணத்தை முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பாரோ எஸ்.பி.பி. என்பது போல தனது சிலையை வடிவமைக்க சில மாதங்களுக்கு முன்பே ஆர்டர் அவர் கொடுத்துள்ள செய்திகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி தனது தாய் தந்தையர் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்தார். இதனால் காலமான தனது பெற்றோர்களின் சிலையை வடிவமைக்க எஸ்.பி.பி திட்டமிட்டிருந்தார். இதற்காக ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கொத்துப்பேட்டையை சேர்ந்த சிற்பி ராஜ்குமார் என்பவரிடம் தனது பெற்றோரின் சிலையை செய்ய எஸ்.பி.பி ஆர்டர் கொடுத்திருந்தார்.

அப்போது தனது சிலை ஒன்றையும் வடிவமைத்து கொடுக்கும்படி எஸ்.பி.பி சிற்பியிடம் கேட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் பயணம் செய்ய முடியாது என்பதால் சிலை செய்வதற்காக தனது புகைப்படங்களை மின்னஞ்சல் மூலம் சிற்பி ராஜ்குமாருக்கு எஸ்.பி.பி அனுப்பியுள்ளார். இந்நிலையில் எஸ்.பி.பி கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவர் இல்லம் திரும்பியவுடன் சிலைகளை காட்டலாம் என்று சிற்பி ராஜ்குமார் நினைத்திருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்குள் மகா கலைஞன் எஸ்.பி.பி மரணமடைந்துவிட்டார். எந்த செயலையும் முன்கூட்டியே யோசித்து செயல்படும் திறன்படைத்தவர் எஸ்.பி.பி என்று ஒரு பொதுவான கருத்து இருப்பதால் தம்முடைய மரணத்தையும் எஸ்.பி.பி முன்னதாகவே உணர்ந்திருப்பாரோ என்று அவர் மீது அன்பு கொண்டவர்கள் பரவலாக பேசி வருகின்றனர். இதுகுறித்து சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வேகமாக பரவி வருகின்றன.

Related Stories:

>