மந்தமாக நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளால் தூக்கியடிக்கும் நகரமான தூங்கா நகரம்

* பல்லாங்குழி சாலைகளால் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

* போக்குவரத்து நெரிசலில் தினந்தோறும் சிக்கி பரிதவிப்பு

மதுரை: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால், தூங்கா நகர் பெருமைக்குரிய மதுரை தற்போது, ‘தூக்கியடிக்கும் நகரமாக’ மாறிப் போயிருக்கிறது. இப்பபகுதிகள் பல்லாங்குழிச்சாலைகளாக மாறி, போக்குவரத்து நெரிசலும் பெருகி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அன்றாடம் சிக்கித் தவித்து வருகின்றனர். பாரம்பரிய கலாச்சாரமிக்க, தொன்மையான, அற்புத வடிவமைப்பினைக் கொண்ட அழகிய நகரம் என்ற பெருமையை மதுரை கொண்டிருக்கிறது. இந்த அற்புத நகருக்குள் மேலும் பல திட்டங்களை நிறைவேற்றும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இவ்வகையில், மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் - ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ்ஸ்டாண்ட் இரண்டையும் இணைத்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மறு சீரமைப்பு செய்து, ஹைடெக்காக மாற்றம் செய்ய ரூ.160 கோடி மதிப்பீட்டில் மெகா திட்டம் உருவாக்கி, அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக அந்த இரு பஸ் ஸ்டாண்ட்களும் மூடப்பட்டு, அங்கிருந்த 446 கடைகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. அங்கு இயக்கப்பட்ட நகர பஸ்கள் சுற்றிலும் உள்ள சாலைகளில் வெட்டவெளியில் நிறுத்தப்பட்டு வருகின்றன.

ஹைடெக் பாணியில்...:

இப்பகுதியில் புதிதாக உருவாக்கப்படும் ஹைடெக் பஸ் ஸ்டாண்ட்டில் 64 பஸ்கள் நிறுத்துவதற்கான பகுதியுடன், அண்டர் கிரவுண்ட் இரு அடுக்கு தளங்களில் 371 கார்கள், 4,865 டூவீலர்கள் நிறுத்தவும் வசதி செய்யப்படுகிறது. மேலும், நான்கு அடுக்கு மாடி கட்டிடத்தில் 429 கடைகள் உருவாக்கப்படுகின்றன. இது தவிர இங்கு புறக்காவல் நிலையம், போக்குவரத்து நிர்வாக அலுவலகம், உணவகம், வர்த்தக பகுதிகள், இணையதளக்கூடம், ஏடிஎம், பயணிகள் காத்திருப்பு அறை, மின்படிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்...:

மதுரை நகருக்கான மேம்பாட்டு திட்டங்கள்தான் என்றாலும், மந்தகதியில் இத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர். போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்காக இரு பஸ் ஸ்டாண்ட்களுக்கும் நடுவில் மேல வெளி வீதியில் மேம்பாலம் கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது மேம்பாலம் திட்டம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிளும் மந்தமாக நடந்து வருவதால், நகரின் இதயம் போன்ற மிக முக்கியமான பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. இப்பகுதியில் சரிவர ேராடு போடாததால், இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இப்பகுதியை கடந்து செல்வதே பெரும் சவாலான காரியமாக இருக்கிறது.

தொடரும் விபத்து...:

இதுதவிர, பாரம்பரிய விளக்குகளுடன் கூடிய நடைபாதை ரயில்வே ஸ்டேஷனில் துவங்கி, மீனாட்சி அம்மன் கோயில், திருமலைநாயக்கர் அரண்மனை வரை அமைக்கப்படுகிறது. இதற்காக சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டி, மின்வயர், மழைநீர், பாதாள சாக்கடை செல்ல வசதியாக கான்க்ரீட் பாதை அமைக்கப்படுகிறது. இதற்கென இந்த பகுதிகளில் ரோடுகள் தோண்டி போடப்பட்டுள்ளது. இதனால், மீனாட்சி கோயில் அதனைச் சுற்றிய பகுதிகள், ஆங்காங்கே குண்டும்குழியுமாக, வாகனத்தில், நடந்து செல்ல முடியாத அளவிற்கு படு மோசமாக காட்சியளிக்கிறது. மழை நேரத்தில் பள்ளம் இருப்பது ெதரியாமல் பலர் வாகனங்களுடன் புதையுண்ட சம்பவங்களும் அரங்கேறுகின்றன.

மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ராஜாமில் ரோடு முதல் குருவிக்காரன் சாலை  வரை வைகை ஆற்றின் இருபக்கங்களிலும் இருவழிச்சாலை அமைக்க ரூ.81.41 கோடி  மதிப்பீட்டில் மாநகராட்சி திட்டமிட்டது. இதற்கான பணிகளும் 20 சதவீதம் கூட  நிறைவு அடையவில்லை. வைகைக்கரைச்சாலை ரோட்டை தோண்டிப் போட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும், மதுரை சாலைகள் குண்டும்  குழியுமாக, ‘தூக்கி அடிக்கும்’ வகையில் காட்சியளிக்கிறது. நகருக்குள் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நடந்து வரும் அத்தனை பணிகளுமே மந்தகதியில் நகர்வதால், ‘தூங்கா நகர்’ பெருமைக்குரிய மதுரை மாநகரத்தில் மக்கள் துன்பத்தை அனுபவித்து வரும் நிலை தான் தொடர்கிறது.

அனைத்து பணிகளும் விரைந்து முடிக்கப்படும்

மதுரை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘வடமாநில தொழிலாளர்கள் இல்லாதபோதும், உள்ளூர் தொழிலாளர்களை கொண்டு தொய்வின்றி ஸ்மார்ட் சிட்டி பணிகளை தொடர்கிறோம். விரைவில் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூ, கமிஷனர் விசாகன் மாறி மாறி அடுத்தடுத்து ஆய்வு நடத்தி பணிகளை வேகப்படுத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் தடைபட்ட வேலைகளை இப்போது விரைவுபடுத்தியுள்ளோம். பாரம்பரிய நடைபாதை, விளக்குகள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளது. கூடிய விரைவில் அனைத்து பணிகளும் நடத்தி முடிக்க நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.   

ஆமை வேகப்பணிகளால் அவதியடைந்து வருகிறோம்

மதுரை சமூக ஆர்வலர் தர்மர் கூறும்போது, ‘‘நான்கு மாசிவீதிகளில் நடக்கவே முடியவில்லை. ஆங்காங்கே பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக தூசி பறக்கிறது. பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகி வருகின்றனர். விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்றார். மதுரை வியாபாரி முத்து கூறுகையில், ‘‘கொரோனா தொற்று பரவல் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் அவர்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர். இதனால் தொழிலாளர்கள் பற்றாக்குறையிலும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை உரிய காலத்திற்குள் நிறைவேற்ற முடியாத நிலை இருக்கிறது. பணிகள் நிறைவடையாததால், போக்குவரத்து நெரிசலிலும், குண்டு குழி சாலைகளிலும் பயணித்து அன்றாடம் அவஸ்தைகளை மதுரை மக்கள் சந்தித்து வருகிறோம்’’ என்றார்.

பணி 12; முடிந்தது 1

மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறும்போது, ‘‘மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 12 பணிகளில் ஒரே ஒரு பணிதான் நிறைவடைந்திருக்கிறது. 11 பணிகள் பெண்டிங்கில் இருக்கிறது. நாட்டின் மற்ற இடங்களில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுடன் ஒப்பிட்டால், மதுரையில் பணிகளின் சதவீதம் மிகுந்த சரிவில் இருக்கிறது. பணி துவங்கி நான்காண்டுகள் நிறைவடைந்தபோதும், நத்தை வேகத்தில்தான் பணிகள் நடந்து வருகிறது. மதுரையில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை துரிதப்படுத்த, வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுவில் கோரப்பட்டுள்ளது. வரும் வாரத்திலிருந்து மதுரையில் இத்திட்டப்பணிகளை வேகப்படுத்தும் நடவடிக்கையில் கூடுதல் கவனம் காட்டப்படும்’’ என்றார்.

Related Stories:

>