×

நாகூரில் 3 தலைமுறையாக 60 குடும்பத்தினர் பட்டா கேட்டு அலையும் அவலம்: தேர்தலை புறக்கணிக்க முடிவு

நாகை: நாகூரில் 3 தலைமுறையாக 60 குடும்பத்தினர் பட்டா கேட்டு அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். நாகை நகராட்சியில் 1 முதல் 11 வார்டு வரை நாகூர் பகுதியிலும், 12 முதல் 36 வார்டு வரை நாகை பகுதியில் உள்ளது. அந்த வகையில் நாகூர் பண்டகசாலை தெரு நாகை நகராட்சி எல்லையில் அமைந்துள்ளது. நாகை நகர எல்லையில் அமைந்திருந்தாலும் இந்த பகுதியில் வசிக்கும் 60க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த வீடுகளுக்கு பட்டா இல்லாமல் இருப்பது வேதனையாக உள்ளது. நாகூர் பண்டகசாலை தெருவில் 3 தலைமுறைகளாக வசித்து வந்தாலும் பட்டா கிடைக்காத காரணத்தால் பசுமைவீடு, புதிதாக மின் இணைப்பு பெறுவது போன்ற அரசின் சலுகைகளை பெற முடியாமல் அவதியுற்று வருகின்றனர். பட்டா கிடைக்காத காரணத்தால் குடிசை வீடுகளை மாற்றி அமைத்து கட்டமுடியாமல் இருக்கின்றனர்.

கடந்த 30 ஆண்டு காலமாக இந்த பகுதியில் வசிப்பவர்கள் பட்டா கேட்டு ஏறி, இறங்காத அலுவலகம் இல்லை. சந்திக்காத எம்பி, எம்எல்ஏக்கள் இல்லை. அதேபோல் கலெக்டர் முதல் விஏஓ வரை பட்டா கேட்டு மனுகொடுத்து ஓய்ந்து போய்விட்டார்கள். பண்டகசாலை தெருவில் வசிப்பவர்கள் ஆட்டோ ஓட்டுநர், கொத்தனார், பெயிண்டர், மீன்லோடு தொழில் என்று தினசரி கூலிகளாக வசித்து வருகின்றனர். இதனால் தங்களது வருமானத்தையும் இழந்து பட்டா கேட்டு அலுவலகம், அலுவலகமாக படையெடுத்து எவ்வித பயனும் இல்லை. தேர்தல் காலத்தில் வாக்கு கேட்க வருவோர்கள் நான் வெற்றிபெற்றால் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று வாய்வார்த்தைகளை கூறிவிட்டு சென்றுவிடுகின்றனர்.
எனவே வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு பட்டா கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் வாக்கு அளிக்க போவது இல்லை.

வாக்குகள் கேட்டு வரும் வேட்பாளர்களையும் பண்டகசாலை தெருவில் அனுமதி அளிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளனர். எனவே பட்டா கேட்டு கடந்த 30 ஆண்டு காலமாக போராடும் நாகூர் பண்டகசாலை தெருவைச் சேர்ந்த மக்களுக்கு பட்டா வழங்க காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

Tags : families ,generations ,Nagore ,election , 60 families in Nagore for 3 generations are wandering around asking for patta: decision to boycott the election
× RELATED ஜனநாயக கடமையாற்றிட ஆர்வமுடன் வந்து...