×

கடை வைக்க 2 ஆண்டாக இடம் ஒதுக்காமல் மாற்றுத்திறனாளியை அலைக்கழிக்கும் அதிகாரிகள்

பெரம்பூர்: கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் 2வது லிங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் அஹமது (45).  இரண்டு கால்களும் செயலிழந்து 80 சதவீத ஊனத்துடன் வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி செவித்திறன் குறைபாடு உடையவர். இவர்களது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம்.  சிராஜுதீன் தனது இருசக்கர வாகனத்தில் தினமும் வீட்டில் டீ போட்டு, பிளாஸ்கில் எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக விற்று வருகிறார். நீண்டதூரம் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாததால், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் முல்லை நகர் பேருந்து நிலையம் எதிரே டீக்கடை வைக்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால், அனுமதி தராமல் மாநகராட்சி அதிகாரிகள் அலைக்கழித்து வந்துள்ளனர். இந்நிலையில், 2019ம் ஆண்டு இறுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாலையோரங்களில் கடை அமைக்க மாநகராட்சி முன்வரலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், மீண்டும் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் மனு செய்தார்.

இதுவரை 10க்கும் மேற்பட்ட மனுக்களை அந்த அலுவலகத்தில் அவர் கொடுத்தும் இதுவரை அவருக்கு எந்தவித முறையான பதிலும் வரவில்லை என வேதனையுடன் கூறுகிறார். ஒவ்வொருமுறை அந்த அலுவலகத்திற்கு செல்லும்போதும், ‘‘நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள், உங்களுக்கு கடிதம் வரும்,’’ என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த அலுவலகத்திற்கு செல்லும்போது, அதிகாரிகள் இல்லை எனவும்,  அதிகாரிகளை பார்க்க 3 அல்லது 4 மணி நேரம் என காத்திருக்க வைப்பதாகவும் கூறப்படுகிறது. சமீப காலமாக 2 கால்களிலும் அதிக வலி ஏற்படுவதால் தெருத்தெருவாக சென்று டீ  விற்க  முடியாமல் இவரது குடும்பம் வறுமையில் தவிக்கும் நிலை உள்ளதாக அவர் வேதனையுடன் தெரிவிக்கிறார்.

இதுகுறித்து சிராஜுதீன் கூறுகையில், ‘‘குறிப்பிட்ட அந்த இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் வந்து பார்த்து அளந்து இதன்மூலம் யாருக்கும் தொந்தரவு இல்லை என்ற பட்சத்தில் மாற்றுத்திறனாளியான தனக்கு அந்த இடத்தை ஒதுக்கி தர அதிகபட்சம் 2 நாட்கள் ஆகும். ஆனால் 2 வருடங்களாக அலைக்கழித்து வருகின்றனர். எனவே, எனக்கு கடை அமைக்க இடம் ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.


Tags : shop , Officials who have been harassing the disabled without allocating space for 2 years to keep the shop
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...