×

ஐசிஎப் தொழிற்சாலையில் பயங்கர தீ

அண்ணாநகர்: சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை, நியூ ஆவடி சாலை அருகே அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதியில் எலக்ட்ரிக் குடோன் உள்ளது. இங்கு ரயில் பெட்டிக்கு தேவையான பொருட்கள், வயர், காப்பர், மின் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு ஷிப்ட் முறையில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த குடோனில் தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனால், ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து வில்லிவாக்கம், அண்ணாநகர், ஜெ.ஜெ.நகர், செம்பியம், எழும்பூர், அம்பத்தூர், திருவல்லிகேணி, வியாசர்பாடி, கோயம்பேடு, அசோக் நகர், மாதவரம் உள்பட 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. ஆனால், அதற்குள் அங்கிருந்த எலக்ட்ரிக் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. ஐசிஎப் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் இணை இயக்குனர் பிரியா ரவிசந்திரன், ராஜேஷ் கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் ஆய்வு செய்தனர்.



Tags : ICF ,factory , Terrible fire at ICF factory
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...