24 மணிநேர மருத்துவமனை, சமூகநல மையங்கள் மூலம் கொரோனா தொற்று காலத்தில் 4,431 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: கொரோனா தொற்று காலத்தில் சென்னை மாநகராட்சி சமூக நல மையங்கள் மூலம் 4,431 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் எளிதில் பாதிக்கக்கூடிய நபர்களாக குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், புற்றுநோயாளிகள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்களை சுகாதாரத்துறை வகைப்படுத்தி பல்வேறு சிகிச்சை அளித்து வருகிறது.  குறிப்பாக கொரோனா காலத்தில் கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு அரசு வழிகாட்டுதல்படி கொரோனோ தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதன் முடிவில் கர்ப்பிணிகளுக்கு நோய் தொற்று இருப்பது என்பது உறுதி செய்யப்படுபவர்களுக்கு சென்னையில் ராயபுரம் அரசு மருத்துவமனை, எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை, கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதை தவிர்த்து தொற்று இல்லாத கர்ப்பிணிகளுக்கு சென்னை மாநகராட்சின் சமூக நல மையங்கள் மற்றும் 24 மணி நேர பிரசவ மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கப்படும். இதன்படி கொரோனா காலத்தில் 4,431 பிரசவங்கள் நடந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர மருத்துவ அலுவலர் எம்.எஸ்.ஹேமலதா கூறியதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் பெருமாள் பேட்டை, செனாய் நகர், சைதாப்பேட்ைட உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளும், மணலி, மாதவரம், ஆர்.ேக.நகர், சஞ்சீவராயன்பேட்டை, புளியந்தோப்பு, அயனாவரம், பாடி, வடபழனி, போரூர், ஆலந்தூர், அடையார், பெருங்குடி உள்ளிட்ட இடங்களில் நகர்புற சமூக நல மையங்களும் உள்ளன. இந்த மையங்களில் கொரோனா தொற்று இல்லாத கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கும் சிகிச்சை தங்குதடையின்றி நடந்தது. இதன்படி இந்த காலமான மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 4,431 கர்ப்பிணிகளுக்கு பிரசவங்கள் நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: