பாஜ தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு தமிழகத்தில் ஒருவருக்கு கூட பதவி இல்லை: எச்.ராஜா கட்சி பதவியில் இருந்து நீக்கம்

* தேசிய பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தமிழக மேலிட பாஜ பொறுப்பாளர் முரளிதரராவ் விடுவிப்பு

சென்னை: பாஜ கட்சியின் தேசிய அளவிலான புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று வெளியிட்டுள்ளார். இதில் தமிழகத்தில் எச்.ராஜா உட்பட யாருடைய பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜ கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று வெளியிட்டுள்ளார். அதில் 12 துணைத் தலைவர்கள், 8 தேசிய பொதுச் செயலாளர்கள், 23 தேசிய செய்தி தொடர்பாளர்கள் உட்பட 70 நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிய பட்டியலில் தேசிய பொதுச் செயலாளர்களான ராம் மாதவ், தமிழக பொறுப்பாளர் முரளிதர்ராவ், அனில் ஜெயின் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். 8 பொதுச் செயலாளர்களில் 5 பேர் புதுமுகங்களாவர். தலித் தலைவர் துஷ்யந்த் குமார் கவுதம் (டெல்லி), புரந்தரேஸ்வரி (ஆந்திரா), சி.டி.ரவி (தெலங்கானா), தருண் சவுக் (பஞ்சாப்), திலிப் சைகியா (அசாம்) ஆகியோர் புதிய தேசிய செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேளாண் மசோதா விவகாரத்தில் பஞ்சாப்பில் பாஜ கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், அம்மாநில பொதுச் செயலாளராக இருந்த ராம் மாதவ் நீக்கப்பட்டுள்ளார். பூபிந்தர் யாதவ், கைலாஷ் விஜய்வர்கியா, அருண் சிங் உள்ளிட்டோர் தேசிய பொதுச் செயலாளர்களாக நீடிக்கின்றனர். இதே போல், மூத்த தலைவர்களும், முன்னாள் முதல்வர்களுமான ராமன் சிங், வசுந்தரா ராஜே, ரகுபர் தாஸ் உள்ளிட்டோர் தேசிய துணைத்தலைவர்களாக நீடிக்கின்றனர். பூணம் மகாஜன் நீக்கப்பட்டு, பாஜ இளைஞரணி தலைவராக தேஜஸ்வி சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய ஐடி பிரிவு மற்றும் சமூக ஊடக தலைவராக அமித் மால்வியா நீடிக்கிறார். மறைந்த துணை முதல்வர் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

துணைத்தலைவர்கள் பட்டியலில் இருந்து மூத்த தலைவர் உமா பாரதி, வினய் சஹரஸ்புத்தே, பிரபாத் ஜா, ஓம் பிரகாஷ் மாத்தூர், சியாம் ஜாஜூ உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். டெல்லியை சேர்ந்த பி.எல். சந்தோஷ் பாஜவின் தேசிய பொதுச் செயலாளராகவும்,  உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ் அகர்வால் பொருளாளராகவும், மத்தியப்  பிரதேசத்தை சேர்ந்த சுதிர் குப்தா துணை பொருளாளராகவும்  நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய செய்தி தொடர்பாளர்கள் எண்ணிக்கை 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அனில் பலூனி தலைமை செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இப்பட்டியலில் இருந்து ஜிவி.எல்.நரசிம்மராவ், மீனாட்சி லேகி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர், ராஜிவ் சந்திரசேகர், டோம் வடக்கன், குரு பிரகாஷ் ஆகியோர் புதிய செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜ தலைவர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை. குறிப்பாக தேசிய செயலாளர் பொறுப்பில் இருந்து எச்.ராஜா பெயரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று தமிழக பாஜ மேலிடப் பொறுப்பாளராக இருந்த முரளிதர்ராவ்வும் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், மாநிலத்தை சார்ந்த ஒருவர் கூட புதிய நிர்வாகிகள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது அக்கட்சியினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரவை விரைவில் மாற்றம்

* புதிய தேசிய செய்தி தொடர்பாளர்கள் பட்டியல் சமூக, சாதி, பிராந்திய மற்றும் மத பன்முகத்தன்மை கொண்டது என பாஜ மேலிடம் கூறி உள்ளது.

* கட்சியின் உயர் அதிகாரம் படைத்த நாடாளுமன்ற குழுவில் உள்ள காலி இடங்கள் இன்னமும் நிரப்பப்படவில்லை. விரைவில் பிரதமர் மோடி அமைச்சரவையில் குறிப்பிட்ட மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும், அதன் பின் காலி இடங்கள் நிரப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.

* பாஜவில் தேசிய நிர்வாகிகளாக பெண்களின் எண்ணிக்கை 8ல் இருந்து 13 ஆக அதிகரித்துள்ளது.

* தேசிய மகளிர் அணி தலைவி இம்முறையும் நியமிக்கப்படவில்லை.

* தேசிய தலைவராக ஜே.பி.நட்டா பொறுப்பேற்ற பிறகு தேசிய நிர்வாகிகள் பட்டியலில் முதல் முறையாக மாற்றம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்?

தமிழகம் புறக்கணிக்கப்பட்டது குறித்து டெல்லி பாஜ வட்டாரங்கள் மூலம் வெளியான தகவலில், ‘தமிழக பாஜ தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டும் மாநிலத்தின் மூத்த தலைவர்கள் அவரோடு இணைந்து பணியாற்றவில்லை. மேலும் அதிகப்படியான கருத்து வேறுபாடுகளும் உள்ளது. இதுகுறித்து கட்சியின் மேலிடத்தில் தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் பலமுறை புகாராகக் கூட தெரிவித்துள்ளார். அதனை அடிப்படையாக கொண்டு தான் தற்போது வெளியிடப்பட்டுள்ள பாஜவின் புதிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சார்ந்த யாருடைய பெயரையும் வெளியிடாமல் பாஜவின் டெல்லி தலைமை நிராகரித்துள்ளது’ என கூறப்படுகிறது.

தென் மாநிலத்திலிருந்து 8 நிர்வாகிகள் நியமனம்

புதிதாக அறிவிக்கப்பட்ட தேசிய நிர்வாகிகள் பட்டியலில், தமிழகத்தை சேர்ந்தவர்களை தவிர இதர தென் மாநிலத்தை சேர்ந்த தலைவர்கள் 8 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் வருமாறு:

பெயர்        பொறுப்பு    மாநிலம்

அருணா        தேசிய துணைத்தலைவர்    தெலங்கானா

அப்துல்லா குட்டி    தேசிய துணைத்தலைவர்    கேரளா

சி.டி.ரவி        தேசிய பொதுச் செயலாளர்    கர்நாடகா

சத்யகுமார்        தேசிய செயலாளர்        ஆந்திரா

தேஜஸ்வி சூர்யா    இளைஞரணி தலைவர்    கர்நாடகா

லட்சுமண்        ஓபிசி பிரிவு தலைவர்        தெலங்கானா

ராஜிவ் சந்திரசேகர்    தேசிய செய்தி தொடர்பாளர்    கர்நாடகா

டோம் வடக்கன்    தேசிய செய்தி தொடர்பாளர்    கேரளா

Related Stories:

>