×

அமைச்சரின் உதவியாளர் கடத்தல் வழக்கில் 7 பேர் கைது

உடுமலை:  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே தாந்தோணியை சேர்ந்தவர் கர்ணன் (35). திருமணமாகி, மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கர்ணன், கால் நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் தனி உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 23ம்தேதி உடுமலை அன்சாரி வீதியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்தபோது, காரில் வந்த 5 பேர் கத்தியை காட்டி மிரட்டி கர்ணனை கடத்தி சென்றனர். பின்னர் அவரிடம் இருந்த 3 பவுன் நகை,2 செல்போன்களை பறித்துக்கொண்டு, உடுமலையில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள வாளவாடி பிரிவில் இறக்கிவிட்டு தப்பினர். இந்த சம்பவத்தில் தளி போலீசார் விசாரித்ததில், 8 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இவர்களில் 7 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கடத்தல் சம்பவத்தில் 8 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் பொம்மை துப்பாக்கி மற்றும் அரிவாளைக் காட்டி அமைச்சரின் உதவியாளர் கர்ணனை அலுவலகத்திலிருந்து காரில் கடத்தியுள்ளனர். பின்னர் அவரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். கர்ணன் தன்னிடம் பணம் இல்லையென்று கூறியபோது நகைகள், செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டைப் பறித்துக் கொண்டனர். அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரத்தை எடுத்து பங்கிட்டு கொண்டனர்.  இவ்வழக்கில் உடுமலை ராமசாமி நகரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பிரதீப்(39), அருண்குமார்(23) உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்திய கார், பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 பேரும் உடுமலை ஜேஎம் 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் உடுமலையை சேர்ந்த ரகு(23) என்பவரை தேடி வருகிறோம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


Tags : abduction ,minister , 7 arrested in kidnapping of minister's aide
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...