×

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 3000 வழங்க ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: நெல் கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு 3000 வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 2020-21 ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை அரசு அறிவித்திருக்கிறது. சாதாரண வகை நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ₹1918 ஆகவும் சன்னரக நெல்லுக்கான கொள்முதல் விலை 1958 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை உழவர்களின் கவலைகளைப் போக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை விவசாயிகளின் கவலைகளை அதிகரித்திருக்கிறது. தமிழக அரசு அறிவித்த இந்த கொள்முதல் விலையில் புரட்சிகரமாக எதுவும் நிகழ்ந்து விடவில்லை.

மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் வழக்கம் போல சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 70, சாதாரண வகை நெல்லுக்கு 50 மட்டும் ஊக்கத் தொகை சேர்த்து கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதில் விவசாயிகள் நலன் எதுவும் இல்லை. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை கடந்த ஜூன் ஒன்றாம் தேதி மத்திய அரசு முடிவு செய்த போது, ஒரு குவிண்டாலுக்கு குறைந்தது 3,000 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, எந்த ஆய்வையும் மேற்கொள்ளாமல், எந்திரத்தனமாக நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அரசு நிர்ணயித்திருப்பது உழவர்கள் நலனில் அக்கறை காட்டும் அணுகுமுறையல்ல.

நெல்லுக்கான கொள்முதல் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால், குவிண்டாலுக்கு 53 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இது 2.88% உயர்வு ஆகும். உலகில் எந்தத் தொழில் பிரிவினருக்கும் இவ்வளவு குறைவாக வருவாய் உயர்வு அறிவிக்கப்படுவதில்லை. உழவர்களுக்கு மட்டும் தான் இத்தகைய அநீதி இழைக்கப்படுகிறது. எனவே, எம்.எஸ்.சுவாமி நாதன் ஆணையப் பரிந்துரைப்படி ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2806 கொள்முதல் விலையாக வழங்கப்பட வேண்டியுள்ள நிலையில், அறுவடைக்கு பிந்தைய செலவுகளையும் சேர்த்து, குறைந்தது குவிண்டாலுக்கு 3,000 கொள்முதல் விலை வழங்க வேண்டும். அது மட்டும்தான் உழவர்களின் கவலையைப் போக்கி மகிழ்ச்சியடையச் செய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ramadas , Ramadas request to provide paddy purchase price 3000 per quintal
× RELATED தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும்...