×

10.61 லட்சம் வாகனங்கள் தமிழகத்தில் புதிதாக பதிவு: சென்னை வடக்கு ஆர்டிஓவுக்கு முதலிடம்: ஊரடங்குக்கு பிறகு விற்பனை சுறுசுறுப்பு

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை 10.61 லட்சம் வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னை வடக்கு ஆர்டிஓ அலுவலகம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்படவில்லை. மேலும் வாகன ேஷாரூம்களும் மூடப்பட்டன. இதனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் விற்பனை கடும் சரிவை சந்தித்தது. அதன்பிறகான தளர்வுகளுக்கு பிறகு மே மாதத்தின் 2வது வாரத்திலிருந்து ஆர்டிஓ அலுவலகங்கள் மீண்டும் செயல்படத்துவங்கின. மேலும் அரசின் வழிகாட்டுதலின்படி புதிய, பழைய வாகன ஷோரூம்களும் திறக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தயக்கம் காட்டினர். பிறகு அவர்கள் மெல்ல, மெல்ல வெளியில் வரத்துவங்கினர்.

இதனால் வாகனங்களின் விற்பனையும் படிப்படியாக அதிகரிக்கத் துவங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு வாகனங்களை வாங்குவதற்காக வரும் மக்களை கவரும் விதமாகவும், வாகன விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்தன. இதன் காரணமாக தமிழகத்தில் முடங்கிக்கிடந்த வாகன விற்பனை மீண்டும் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. வாகன உற்பத்தியும் மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. இதுவரை நடப்பு ஆண்டில் (செப்.26ம் தேதி நிலவரப்படி) 10 லட்சத்து 61 ஆயிரத்து 265 வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், சென்னை வடக்கு ஆர்டிஓ அலுவலகம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு மட்டும் 6,49,050 வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தீபாவளிப்பண்டிகை வரவுள்ளதால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மேலும் பல சலுகைகளை வாரி வழங்கும். இதன்காரணமாக தமிழகத்தில் வாகன விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டில் மொத்தம் 19,67,997 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் கொரோனா பரவல் காரணமாக மற்ற துறைகளைப்போல் ஆட்டோ மொபைல் துறையும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் வாகனங்களின் விற்பனை சற்று குறையும் என தெரிகிறது.

முதல் 5 இடம்
இடம்        பதியப்பட்ட வாகனங்கள் எண்ணிக்கை
சென்னை வடக்கு    6,49,050
கோவை தெற்கு    5,50,352
கோவை வடக்கு    5,33,268
பூந்தமல்லி        5,00,184
சென்னை மேற்கு    4,75,098

தமிழகத்தில்
மாதவாரியான பதிவு விபரம்
மாதம்    வாகனப்பதிவு
ஜனவரி    1,73,804
பிப்ரவரி    1,78,709
மார்ச்    1,77,843
ஏப்ரல்    -
மே    32,844
ஜூன்    1,10,742
ஜூலை    1,10,759
ஆகஸ்ட்    1,28,743
செப்டம்பர்    1,47,821
மொத்தம்    10,61,265



Tags : Sales boom ,Tamil Nadu ,Chennai North RTO ,curfew , 10.61 lakh new vehicles registered in Tamil Nadu: Chennai North RTO tops: Sales boom after curfew
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...