22 சுங்கச்சாவடிகளில் சமீபத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் ராஜிவ் காந்தி சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

* அக்.1 முதல் அமலுக்கு வருகிறது

* தமிழக அரசு அறிவிப்புக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

சென்னை:  தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ராஜிவ்காந்தி சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. 17 கி.மீ நீளம் கொண்ட இந்த சாலையில் பெருங்குடி, துரைப்பாக்கம், ஏகாட்டூர், சோழிங்கநல்லூர் சந்திப்பு அருகே 2 சுங்கச்சாவடிகள் என மொத்தம் 5 உள்ளன. 2009 முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. 2018 ஜூலை 1ம் தேதி இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டன. இதை தொடர்ந்து கடந்த ஜூலை 1ம் தேதி மீண்டும் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், இந்த நேரத்தில் சுங்க கட்டணம் உயர்த்தினால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் என்பதால் தற்காலிகமாக சுங்க கட்டணம் உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், பொது ேபாக்குவரத்து சேவைக்கு அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற வாகன பயன்பாடும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதை காரணம் காட்டி வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு 2022 வரை அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சாலையில் சென்று வரவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மாதம் முழுவதும் பயணிக்க பாஸ் பெற ஆட்டோ 280ல்  இருந்து 311, கார் 2150ல் இருந்து 2390 ஆகவும், இலகு ரக  வாகனங்களுக்கு 2080ல் இருந்து 3050 ஆகவும், பஸ் 4600ல் இருந்து  5050 ஆகவும், சரக்கு வாகனம் 6850ல் இருந்து 7500 ஆகவும்  உயர்த்தப்படுகிறது.

இந்த கட்டண உயர்வு அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு  வருகிறது. இந்த கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள 22 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>