போதை பொருள் வழக்கில் பிரபல நடிகைகள் சிக்கினர் தீபிகா படுகோனிடம் 5 மணி நேரம் விசாரணை: சாரா அலி கான், ஸ்ரத்தா கபூரும் ஆஜர்

மும்பை: போதை பொருள் வழக்கில் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனிடம் போதை பொருள் தடுப்புத் துறை  அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை  நடத்தினர். நடிகைகள் சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர் ஆகியோரிடம் தலா 4  மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.  பிரபல பாலிவுட் இளம் நடிகர்  சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள  தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டதாக  சந்தேகம் எழுந்ததால் சுஷாந்த்  சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கரபர்த்தி உட்பட பலரிடம் சிபிஐ  விசாரணை நடத்தியுள்ளது. மேலும், சுஷாந்தின்  மரணத்தில் போதைபொருள் மாபியாவுக்கும்  தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் போதை பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் ஏற்கனவே ரியா சக்கரபர்த்தி, அவருடைய  தம்பி ஷோவிக் சக்கரபர்த்தி உட்பட 16 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சுஷாந்தின்  மானேஜர் ஜெயா சாகாவிடம் விசாரணை நடத்தியபோது, நடிகைகள் தீபிகா படுகோன்,  ஸ்ரத்தா கபூர், சாரா அலிகான் உட்பட பல பிரபல நடிகைகளுக்கும் போதை பொருள் கடத்தல் கும்பலுடன்  தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.  இதனை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய  அதிகாரிகள், தீபிகாவின் மானேஜர் கரிஷ்மா பிரகாஷின் வாட்ஸ் அப்பை ஆய்வு  செய்தபோது, அவரிடம் ‘டி’ என்ற எழுத்தில் தொடங்கும் நபருக்கு போதை பொருள் சப்ளை  செய்யுமாறு கேட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கரிஷ்மாவிடம் விசாரணை  நடத்தப்பட்டது. ‘டி’ என்பது யார் என்று அறிய அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக  கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து,  நடிகைகள் தீபிகா படுகோன், ஸ்ரத்தா  கபூர் மற்றும் சாரா அலிகானுக்கும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்படி, நேற்று இவர்கள் விசாரணைக்கு ஆஜராகினர். தீபிகாவிடம் கொலாபாவில் உள்ள போதை பொருள் தடுப்பு துறையின் விருந்தினர்  விடுதியில் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மற்ற இருவரிடமும்  பலாட் பியரில் இருக்கும் போதை பொருள் தடுப்பு துறை அலுவலகத்தில் தலா  4 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டது. விசாரணைக்கு பின் 3 பேரும் வீட்டுக்கு  செல்ல அனுமதிக்கப்பட்டனர். மீண்டும் தேவைப்பட்டால் விசாரணைக்கு சம்மன்  அனுப்பப்படும். அப்போது நீங்கள் ஆஜராக வேண்டும் என்று போதை பொருள்  தடுப்புத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்தனர்.

நடிகர்கள், நடிகைகள் பீதி

தீபிகா படுகோனின் மானேஜர் கரிஷ்மா அளித்த தகவலின் பேரில்–்தான், தீபிகா உள்ளிட்ட மூன்று நடிகைகளும் போதை தடுப்பு பிரிவின் விசாரணை வளையத்துக்குள் சிக்கி இருக்கின்றனர். அதேபோல், தீபிகா, ஷரத்தா, சாரா அலிகானிடம் நேற்று பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதால், அவர்கள் மேலும் பல நடிகர், நடிகைகளின் பெயர்களை அதிகாரிகளிடம் கூறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால், இவர்களுடன் சேர்ந்து போதை பார்ட்டிகளில் பங்கேற்ற மற்ற நடிகைகள், நடிகர்கள் பீதியில் உள்ளனர்.

Related Stories:

>