×

கேள்விக்குறியாகும் சமூக இடைவெளி தென்காசியில் இடப்பற்றாக்குறையால் சிக்கி தவிக்கும் கலெக்டர் அலுவலகம்: கொரோனாவால் 160 ஊழியர்கள் பாதிப்பு

தென்காசி: தென்காசி  கலெக்டர் அலுவலகத்தில்  குறுகிய  இடத்தில்   அதிகமான அலுவலர்கள் பணிபுரிவதால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகி  வருகிறது.தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கு 9 துணை கலெக்டர்கள்  உட்பட 150க்கும்  மேற்பட்ட பணியிடங்கள் கடந்த நவம்பரில் ஒதுக்கீடு  செய்து அரசாணை  பிறப்பிக்கப்பட்டது. இவற்றில் பெரும்பாலான இடங்கள் நிரப்பப்பட்டு விட்டது. டிஆர்ஓவாக கல்பனா நியமிக்கப்பட்டார். மாவட்ட  ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை  அதிகாரியாக மரகதநாதன்,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்,  சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரியாக ஞானசேகரன்,  மாவட்ட கலால் துறை உதவி ஆணையராக பிர்தவ்ஸ்  பாத்திமா, மாவட்ட வழங்கல் அதிகாரியாக கோகிலா,   மாவட்ட சமூக நலத்திட்ட தனித்துணை ஆட்சியராக சரவணன்   கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட   இயக்குநராக சரவணன், மாவட்ட ஊராட்சிகளின் உதவி   இயக்குனராக பிரான்சிஸ் மகாராஜன், மேலும் மாவட்ட   தணிக்கை துறை உதவி இயக்குநராக பாபு பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கலெக்டர்   அலுவலகத்தை பொருத்தவரை பிஏஜி எனப்படும் கலெக்டரின் நேர்முக   உதவியாளர் (பொது) பணியிடம் மட்டுமே தற்போது காலியாக உள்ளது.   நிரந்தரமாக கலெக்டர்   அலுவலகம் கட்டப்படாததால் பதிவுத்துறைக்கு    சொந்தமான கட்டிடத்தில் தற்காலிக கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.8 அறைகளை கொண்ட   இந்த அலுவலகத்தில் கலெக்டர், டிஆர்ஓ உள்ளிட்ட ஒரு   சில அதிகாரிகளுக்கு மட்டுமே இடம் உள்ளது. மீதமுள்ள பல்வேறு துறை   அதிகாரிகளும் எதிரேயுள்ள ஆர்டிஓ அலுவலகம், ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றில் மிகவும் குறுகலான  கட்டிடங்களில் பணிபுரிந்து வருகின்றனர். பதிவுத்துறை கட்டிடத்தின் முதல்   மாடியில் மாவட்ட கலெக்டர் அறையும், டிஆர்ஓ அலுவலகமும் உள்ளது. ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம்,   மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட  இயக்குநர் அலுவலகம், மாவட்ட தணிக்கை உதவி   இயக்குநர் அலுவலகம், மாவட்ட  வழங்கல் அதிகாரி அலுவலகம் ஆகியவை    சிறிய வளாகமான தென்காசி ஊரக ஒன்றிய  வளாகத்தில் இயங்கி வருகிறது. தென்காசி  ஒன்றிய தலைவர் அறை ஊராட்சிகளின் உதவி   இயக்குநர் அறையாகவும், ஒன்றிய  மக்கள் பிரதிநிதிகளின் கூட்டரங்கு   ஊராட்சிகளின் தணிக்கை உதவி இயக்குநர்  அலுவலகமாகவும், பிடிஓ   (கிராம ஊராட்சி) அறையில் கூடுதலாக தணிக்கை உதவி  இயக்குனரும் பங்கிட்டு   கொண்டுள்ளனர்.

தென்காசி ஆர்டிஓ  அலுவலகத்தில் மாவட்ட சமூக   பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர்  அலுவலகமும்,   கலால் துறை உதவி ஆணையர்   அலுவலகமும், மாவட்ட செய்தி மக்கள்  தொடர்பு அலுவலகமும் இயங்குகிறது.ஆர்டிஓ  அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பதற்காக   ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 400  சதுர அடி இடத்தில் மட்டும் மூன்று துறைகள்   இயங்கி வருகிறது. ஆர்டிஓ அலுவலகத்தில் கூட்டரங்கு கலால் துறை உதவி   ஆணையர் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று காரணமாக  சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தும் அரசு துறைகளே   இடப்பற்றாக்குறையால் சமூக இடைவெளியை  கடைப்பிடிக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பேரிடர் கால முன்கள   அதிகாரிகள், அலுவலர்கள்  பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கும் நிலை   ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

 தென்காசி  மாவட்டத்தில் பேரிடர்  காலத்தில்  முன் களத்தில் நின்று பணியாற்றிய அரசு  ஊழியர்களின் சுமார் 160  பேர் வரை  நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக ஊழியர்  சங்கங்கள் வேதனையுடன் தெரிவித்தது குறிப்பிடித்தக்கது.இக்குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தென்காசி  ரயில் நகரில் அரசு சேமிப்பு கிடங்கு கட்டிடத்தில் ரூ.4 கோடியில் நடந்து வரும் தற்காலிக கலெக்டர் அலுவலக சீரமைப்பு பணிகளை  விரைவாக  முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பது அதிகாரிகள்,  அலுவலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : office ,Collector ,Tenkasi ,Corona , The social gap in question Due to lack of space in Tenkasi Trapped Collector's Office: 160 employees affected by Corona
× RELATED ரஷ்ய விண்வெளி ஆய்வுக்குழு திரும்பியது