×

சேலம் அருகே மாற்று சாதி பெண்ணுடன் காதல் திருமணம் செய்த வாலிபரை கடத்தி தாக்கி மொட்டையடித்த குடும்பத்தினர்: தாய், அக்கா, சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது

வாழப்பாடி:வாழப்பாடி அருகே மாற்று சாதி பெண்ணுடன் காதல் திருமணம் செய்துகொண்ட வாலிபரை, கடத்தி வந்த குடும்பத்தினர் அடித்து உதைத்து, மொட்டையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது தாய், அக்கா உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாய்க்கன்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் அருள்குமார் (25). கூலித்தொழிலாளியான இவரும் ஏத்தாப்பூர் அடுத்த தாண்டனூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். சிறுமி மைனர் என்பதாலும் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், இவர்களது காதலுக்கு இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அச்சிறுமியுடன் அருள்குமார் நெருங்கிப் பழகியதால் அவர் கர்ப்பமானார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறியது.

இதுதொடர்பாக வாழப்பாடி போலீசில் அருள்குமாரின் தயார் அபிலா, தனது மகன் மைனர் பெண்ணை கடத்திச் சென்றுவிட்டதாக புகார் கூறினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான காதல் ஜோடியை தேடி வந்தனர். இதனிடையே, வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி, திருமணம் செய்து ெகாண்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்பிபி காலனியில் குடும்பம் நடத்தி வந்தனர். தற்போது அச்சிறுமி 8மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுபற்றிய தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள்குமாரின் வீட்டிற்கு கிடைத்தது. இதனையடுத்து கடந்த 23ம் தேதி இரவு, அருள்குமாரின் தாய் மற்றும் சகோதரர்கள், காரில் பள்ளிபாளையம் சென்றனர். அங்கு அருள்குமாரை அடித்து உதைத்து அவரை காரில் கடத்தி, சின்னமநாய்க்கன்பாளையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் ரகசிய இடத்தில் வைத்து அருள்குமாரை தென்னை மட்டையால் ெகாடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், அருள்குமாருக்கு மொட்ைடயடித்து அவமானப்படுத்தியுள்ளனர். 8மாத கர்ப்பிணியான அச்சிறுமி அளித்த தகவலின் பேரில் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார், அருள்குமாரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், அருள்குமாரை கொடூரமாக தாக்கி மொட்டையடித்த அவரது தாயார் அபிலா (45), சகோதரர்கள் நேரு (30), வெங்கடேசன், அக்கா பரிமளா, அருள்குமாரின் சித்தப்பா மகன்கள் மணிகண்டன் (30) மற்றும் ரகுநாதன்(25) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். அவரை கைது செய்வதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாற்று சாதிப்பெண்ணை காதல் திருமணம் செய்ததற்காக, வாலிபரை அவரது குடும்பத்தினரே கடத்தி கொடூரமாக தாக்கி மொட்டையடித்த சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாலிபர் மீது போக்சோ வழக்கு
காதல் ஜோடி மாயமானது குறித்து, அருள்குமாரின் தாயார் வாழப்பாடி போலீசில் பிப்ரவரியில் புகார் அளித்திருந்தார். அதில், தனது மகன் அருள்குமார், மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்து கொண்டதாக, குற்றம் சாட்டியிருந்தார். தற்போது அருள்குமார் தாக்கப்பட்டுள்ள நிலையில், மீட்கப்பட்டுள்ளார். அவர் மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அருள்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் திருமணம் செய்த சிறுமி தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : sister ,brothers ,caste woman ,Salem , Kidnapped boy who married for love with an alternative caste woman near Salem Family members attacked and shaved: 6 arrested including mother, sister, brothers
× RELATED அவமானங்கள்தான் தலைநிமிர வைத்துள்ளது!