×

டிக்டாக் காதலன் மீது நடவடிக்கை கோரி விஷத்துடன் காவல் நிலையம் வந்த சென்னை பெண்ணால் பரபரப்பு: போலீசார் விசாரணை

கெங்கவல்லி: டிக் டாக் மூலம் பழகி, பலாத்காரம் செய்து ஏமாற்றியவர் திருமணம் செய்வதாக காவல்துறையினர் முன் நாடகமாடி விட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக விஷபாட்டிலுடன் வீரகனூர் காவல்நிலையத்திற்கு சென்னை இளம்பெண் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னையைச்  சேர்ந்தவர் சசிகலா(28). அங்குள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வரும் இவருக்கு, சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டூடியோ உரிமையாளர் ரமேஷ் என்பவருடன் டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், ஆசை வார்த்தை கூறி தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக ரமேஷ் மீது வீரகனூர் போலீசில் சசிகலா  புகார் தெரிவித்தார். அந்த புகாரில், பல பெண்களுடன் ரமேஷ் திருட்டுத்தனமாக பழகி வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதன்பேரில், விசாரணை நடத்திய போலீசாரிடம் மூன்று மாதத்தில் சசிகலாவை திருமணம் செய்து கொள்வதாக ரமேஷ் உறுதி அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து சசிகலா சமரசமாகி சென்னைக்கு திரும்பினார்.

இந்நிலையில், சசிகலாவை சந்தித்த ரமேஷ், ஏற்கனவே இந்த வழக்கால் நிறைய பணம் செலவாகி விட்டது. எனவே, ₹1 லட்சம் வாங்கிக்கொண்டு பிரச்னை செய்யாமல் விலகி விடுமாறு பேரம் பேசியுள்ளார். மீண்டும் பிரச்னை செய்தால், அதனை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு குற்றச்சாட்டின்பேரில், தன் மீது வழக்குகள் வந்தபோது அதனை  சமாளித்த அனுபவம் தனக்கு இருப்பதாகவும், சமீபத்தில் தனது அண்ணியின் தற்கொலை வழக்கில் கூட அதுபோல் தப்பியதாகவும், தன்னைத் தேடி ஊருக்கு வந்தால் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சென்னை போலீசில் சசிகலா புகார் தெரிவித்தார். அந்த புகாருக்கான ஆதாரமாக தனது அலைபேசியில் ரமேஷ் பேசியதை பதிவு செய்து வைத்திருந்தார். இதனை அறிந்த ரமேஷ், நேற்று முன்தினம் சசிகலாவிடம் நைசாக பேசி திருவண்ணாமலைக்கு வரவழைத்துள்ளார். அப்போது, நண்பர்கள் மூலம் செல்போனை பறிக்க முயன்றுள்ளார்.

அவர்களிடமிருந்து தப்பிய சசிகலா, மீண்டும் வீரகனூர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை தெரிந்து கொள்வதற்காக நேற்று வீரகனூர் காவல் நிலையத்திற்கு சசிகலா நேரில் வந்தார். அப்போது, அவர் விஷ பாட்டில் வைத்திருப்பதை அறிந்த போலீசார் திடுக்கிட்டனர். உடனே, அதனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில் அங்கு வந்த ரமேஷின் அண்ணன், “இவள் மருந்து குடித்து செத்தாலும் அந்த வழக்கை எப்படி சந்திக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்” என மிரட்டல் விடுத்தவாறு ரமேஷை அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால், திடுக்கிட்ட சசிகலா, காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, நாளை (இன்று) காலை 10 மணிக்கு  நேரில் வருமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால், சசிகலா சென்னைக்கு திரும்பாமல் வீரகனூர் பகுதியிலேயே தங்கி உள்ளார். காவல்நிலையத்தில் நியாயம் கேட்பதற்காக இளம்பெண் விஷ பாட்டிலுடன் வந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Chennai ,police station ,Police investigation ,Tiktak , Tic Tac Toe came to the police station with poison demanding action against her boyfriend Chennai woman's agitation: Police investigation
× RELATED சென்னையில் மாற்றுத்திறனாளி பெண்ணை...