×

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு- பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் மூன்றாவது நாள் ரயில் மறியல்

அமிர்தசரஸ்: மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி சார்பில் மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது. அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தண்டவாளத்தில் நடுவில் சிறிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. விவசாய சங்க தலைவர்கள் அதில் அமர்ந்து, மசோதாவை எதிர்த்து உரையாற்றுகின்றனர். இரவில் போராட்டக் களத்திலேயே தூங்கினர்.
 
இன்று மூன்றாவது நாள் போராட்டம் நடைபெறுகிறது. விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று மதியம் 1 மணிக்கு போராட்டம் நிறைவடைகிறது. இதேபோல் அக்டோபர் 1ம் தேதி முதல் காலவரம்பற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : strike ,Punjab , Protest against agricultural bills - Farmers strike for third day in Punjab
× RELATED ஊட்டி எல்லையை விரிவுபடுத்தக்கோரி...