×

தெலங்கானாவில் காதல் திருமணம் செய்த வாலிபர் ஆணவக்கொலை: பெண்ணின் தந்தை, தாய்மாமன்கள் உட்பட 12 பேர் கைது

திருமலை: காதல் திருமணம் செய்த வாலிபரை கடத்தி ஆணவக் கொலை செய்த, பெண்ணின் தந்தை, தாய்மாமன்கள் உட்பட 12 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஹேமந்த் (29). இவரும், சங்காரெட்டி பகுதியைச் சேர்ந்த அவந்தி (26) என்ற பெண்ணும்  கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள். இதனால், இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த ஜூன் 11ம்  தேதி வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், சங்காரெட்டி பகுதியில் உள்ள கோயிலில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்தனர். தங்கள்  திருமணத்தை பதிவும் செய்தனர். பின்னர், ஐதராபாத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இதையறிந்த பெண்ணின் தாய் மாமன் விஜய், கடந்த ஒரு வாரமாக அவந்தியை போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று  முன்தினம் அவந்தியின் பெற்றோருடன் சமாதானம் பேசி சேர்த்து வைப்பதாக கூறிய தாய் மாமன்கள் விஜய், யுகேந்திரா ஆகியோர், தம்பதியை  ரங்காரெட்டி மாவட்டத்திற்கு காரில் அழைத்துச் சென்றனர்.

வழியில் அவர்களின் நடவடிக்கைகளால் சந்தேகம் அடைந்த தம்பதியினர், ஓடும் காரில் இருந்து குதித்து தப்ப முயன்றனர். அப்போது, அவந்தியை  அங்கேயே விட்டு விட்டு, ஹேமந்த்தை மட்டும் காரில் ஏற்றிச் சென்றனர்.உடனே, சங்காரெட்டி போலீசாருக்கு அவந்தி புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹேமந்தை தீவிரமாக தேடி வந்தனர்.  இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சங்கா ரெட்டி மாவட்டம், நகரம் பகுதியில் ஒரு முட்புதரில் ஹேமந்த் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்  சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சங்காரெட்டி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அவந்தியின் தந்தை லட்சுமணா, தாய் மாமன்கள் விஜய், யுகேந்திரா உட்பட 12 பேரை போலீசார் கைது விசாரணை நடத்தி  வருகின்றனர். மகளை காதலித்து திருமணம் செய்த மருமகனை ஆவணக்கொலை செய்த இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்பும்...
ஐதராபாத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கூட, மிரியாளகூடாவை சேர்ந்த பிரனய் வாலிபரும், அமுர்த வர்ஷ்னி என்ற இளம்பெண்ணும் காதலித்து  திருமணம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அமுர்த வர்ஷினியின் தந்தையான தொழிலதிபர் மாருதிராவ், மருமகனை நடுரோட்டில் கூலிப்படை  வைத்து வெட்டிக்கொலை செய்தார். இருப்பினும், பின்னர் தனது தவறை உணர்ந்த அவர் தற்கொலை செய்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Telangana , Married for love in Telangana Adolescent genocide: Girl's father, parents 12 people were arrested, including
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!