×

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு கவர்னர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவிற்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தெலங்கானா கவர்னர் தமிழிசை  சவுந்தரராஜன், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பன்வாரிலால் புரோகித் (தமிழக கவர்னர்): பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்ததையும்  ஏற்படுத்தியுள்ளது. நல்ல மனிதர், வாழ்நாள் முழுவதையும் பாடுவதற்காகவே அற்பணித்தார். இந்திய மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள இசை  ரசிகர்களுக்கும் அவரது இறப்பு ஈடு செய்ய முடியாதது.தமிழிசை சவுந்தரராஜன் (தெலங்கானா கவர்னர்):  பிரபல பின்னணி பாடகர், சகோதரர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்த செய்தி அதிர்ச்சி  அளிக்கிறது. தெலுங்கு மண்ணில் பிறந்து தமிழ் மண்ணில் பிரபலமடைந்த எஸ்.பி.பி மண்ணுலகில் பாடியது போதும், இனிமேல் விண்ணுலகில் பாட  வாருங்கள் என்று விண்ணுலகம் அழைத்துக்கொண்டதோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இந்திய  இசை உலகத்திற்கு 20ம் நூற்றாண்டில், இறைவன் அளித்த இனிய கொடையாக வந்து உதித்தவர் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருடைய  இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவரது பாடல்கள் என்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது  மறைவு திரைப்பட துறைக்கும், கலை உலகிற்கும், எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.ஓ.பன்னீர்செல்வம் (துணை முதல்வர்): தேமதுரக் குரல் கொண்டு இவ்வையகத்தை மகிழ்வித்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நம்மை விட்டு  மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயர் அடைந்தேன். திரையிசை உலகில் ஒரு சகாப்தமாக விளங்கினார். அற்புத குரல் வளத்தால் சிறியோர்  முதல் பெரியோர் வரை அனைவரையும் ஈர்த்து இந்திய அளவில் எண்ணிலடங்கா இசை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.

துரைமுருகன் (திமுக பொதுச்செயலாளர்): திரை உலகில் இசையின் இமயமாக உயர்ந்து நின்றவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அந்த இமயம் இன்று  சரிந்து விழுந்துவிட்டது. நிரப்பப்பட முடியாத இடம் பாலுவின் இடம். இசைக்கடல், தன் ராக ஆலாபனை அலைகளை ஆடாமல் நிறுத்திக் கொண்டது.  இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு எஸ்.பி.பி. புகழ் நிலைத்து நிற்கும்.கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): நாட்டு மக்களை குறிப்பாக தமிழக மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இழப்பு  என்பது ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும். இன்னொரு எஸ்.பி.பி.யை எப்போது காணப்போகிறோம். அவரது இடத்தை யாரால் நிரப்ப முடியும்.ராமதாஸ் (பாமக நிறுவனர்): பாடகர், இசையமைப்பாளர், நடிகர், பின்னணி குரல் கலைஞர் என பல அவதாரங்களை எடுத்தவர். இசை உலகில் அவர்  படைத்த சாதனைகளை அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு எவராலும் முறியடிக்க முடியாது. உண்மையாகவே எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவு  அனைத்து மொழி திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் ஒலிக்கும் வரை அவர் மக்களிடம் வாழ்ந்து  கொண்டிருப்பார்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணத்தோடு நீண்ட நெடிய போராட்டம் நடத்தி மறைந்துவிட்டார் என்ற செய்தி  மனதை உலுக்குகிறது. உயிர் ஓய்ந்து உடலால் அவர் மறைந்தாலும், யாழ் மீட்டுவது போன்ற அவரது கானக் குரல் இன்னும் எவ்வளவு காலமானாலும்  காற்றோடு கலந்திருக்கும். கேட்போரைக் காந்தமெனக் கவர்ந்திழுக்கும்.கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): 20 வயதில் பாட துவங்கி 55 ஆண்டுகளாக பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பாடி  மக்கள் மனங்களில் நிறைந்துள்ளார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள இசைப் பிரியர்கள்  அனைவருக்குமே பேரிழப்பாகும்.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): இசை உலகில் புகழ் கொடி நாட்டிய எஸ்.பி.பி பன்முகத் திறன் படைத்த இணையற்ற கலைஞர்.  சின்னத்திரையில் இளைய தலைமுறையினர் பாடல் பயிற்சிக்கு நுட்ப பயிற்சிகளை எளிய முறையில் கற்றுக்கொடுத்து வந்த அற்புத ஆசிரியர்.  இவரது மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): தனது இனிய குரலால் அனைத்து தரப்பினரின் இதயங்களையும் கொள்ளை கொண்ட எஸ்.பி.பி.யின் மறைவு  திரைத்துறையினர் மட்டுமல்லாது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்றால் அது மிகையல்ல.ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): தேனிசை குரலால், தென்றலாக தவழ்ந்து, இனிய பாடல்களால் அனைவரது மனதையும் மயக்கிய எஸ்.பி.பி மறைவு  செய்தி, என்னை ஆறாத்துயரில் ஆழ்த்தியது. அவரது இழப்பு இசையுலகிற்கும், ரசிகப் பெருமக்களுக்கும் பேரிழப்பாகும். அவர் நம்மைவிட்டு  மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் நம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அது சாகா வரம் பெற்றது.திருமாவளவன் (விசிக தலைவர்): இயல்மொழிக்கும் இசைமொழிக்கும் உயிர்ப்பூட்டும் உன்னத ஆளுமை கொண்ட திரைஇசை பாடகர்  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன். கவர்ச்சிகரமான ஒரு பேராளுமையை யாம்  இழந்திருக்கிறோம் என்பது பெரும் கவலையளிக்கிறது. அவரது உணர்வும், குரலும், மொழியும் காற்றில் கலந்து கரைந்து இயங்கிக்கொண்டே  இருக்கின்றன. அவர் எப்போதும் எங்கும் நிறைந்திருப்பார். நம்மோடு உறைந்திருப்பார்.

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. தன் வசீகரமிக்க  குரலால் மொழிகளைக் கடந்து மக்களின் நேசத்தை பெற்றவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் ஜொலித்தவர்.எல்.முருகன் (தமிழக பாஜ தலைவர்): திரை இசை பாடல்களில் முடிசூடா மன்னனின் பிரிவு தமிழகத்திற்கும், இசை ரசிகர்களுக்கும், இந்திய  திரைத்துறைக்கும் நம் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.இதுபோல, எம்பிக்கள் தயாநிதி மாறன், கனிமொழி, தமாகா மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், சமக தலைவர் சரத்குமார், சமத்துவ மக்கள் கழக  தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி.பி.யின் உடல் அஞ்சலிக்கு மாநகராட்சி மறுப்பு
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எஸ்.பி.பி.யின் மகன் சரணை நேற்று மாலையில் சந்தித்து உடல் அடக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது மாநகராட்சி அதிகாரிகள், கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ளது. இதனால், உடலை உடனே அடக்கம் செய்ய வேண்டும். இரவில் அஞ்சலி செய்ய அனுமதிக்க முடியாது என்றனர். அதைத் தொடர்ந்து எஸ்.பி.பி.யின் குடும்பத்தார் இரவோடு இரவாக எஸ்.பி.பி.யின் உடலை வாகனத்தில் செங்குன்றம் அடுத்த தாமரைப்பாக்கத்தில்  உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு இன்று அவரது குடும்ப முறைப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, உடல் நல்லடக்கம்  செய்யப்படுகிறது.



Tags : SB Balasubramaniam ,Governor ,death ,Chief Minister ,leaders ,party , Singer SB Balasubramaniam passes away Condolences to the Governor, Chief Minister and political party leaders
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...