×

21 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், கோபுரசநல்லூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான 2 ஏக்கர் குளம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த  நிலத்தில், சிலர் இரவு நேரங்களில்  குப்பைகள் மற்றும் மண்கொட்டி அதனை சிறுக, சிறுக மூடி வந்தனர். மேலும், அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து  தடுப்புகள் வைத்திருந்தனர். இந்நிலையில், இதுகுறித்து வந்த தகவலையடுத்து பூந்தமல்லி வருவாய் ஆய்வாளர் விஜய்ஆனந்த் தலைமையில்  வருவாய் துறையினர் அந்த  இடத்துக்கு நேற்று சென்று அங்கிருந்த தடுப்புகள் அனைத்தையும் அகற்றினர். மேலும், அரசுக்கு சொந்தமான நிலம் என அந்த பகுதியில் அறிவிப்பு  பலகை வைத்தனர்.  மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 20 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புழல்; செங்குன்றம் அடுத்த அலமாதி ஊராட்சி விஜயலட்சுமி நகர், அண்ணா நகர், வேட்டைக்காரன் பாளையம், அலமாதி ஆகிய பகுதிகளில் சுமார்  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அலமாதி முந்திரி தோப்பு அருகே சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு உள்ளது.இந்நிலையில், சமீப காலமாக இந்த சுடுகாட்டை சமூக விரோதிகள் பலர் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு ஆக்கிரமித்து வீட்டு மனைகளாக பிரித்து  கற்களை நட்டனர். இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் புகார் மனு கொடுத்தனர்.

அதன்பேரில், பொன்னேரி கோட்டாட்சியர் வித்யா, தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் மேற்பார்வையில் சோழவரம் வருவாய்த்துறை ஆய்வாளர் பாரதி,  கிராம நிர்வாக அதிகாரிகள் முருகேசன், சீனிவாசன் மற்றும் வருவாய் துறையினர் நேற்று அந்த இடத்துக்கு சென்றனர். பின்னர், சமூக விரோதிகள்  கற்களை வைத்து ஆக்கிரமித்து இருந்த ₹1 கோடி மதிப்பிலான சுடுகாட்டின் ஒரு பகுதியை வருவாய் துறையினர் மீட்டனர்.



Tags : 21 crore worth of government land recovery
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...