×

கடைசி நாள் கூட்டத்தொடரை எதிர்க்கட்சி எம்பிக்கள் புறக்கணித்தது ஏன்?: மக்களவை சபாநாயகர் விளக்கம்

புதுடெல்லி:  மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் புறக்கணித்தது ஏன்?என்பது பற்றி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரைகடந்த 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கூட்டத்தொடரின் இடையே அடுத்தடுத்து எம்பிக்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் முன்கூட்டியே கடந்த 23ம் தேதியே கூட்டத் தொடர் முடிக்கப்பட்டது. இதில் மாநிலங்களவையில் வேளாண் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போது கடும் அமளி ஏற்பட்டது.

இதனால் 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட அதற்கு கண்டனம் தெரிவித்து, கடைசி நாள் கூட்டத்தொடரை எதிர்க்கட்சி எம்பிக்கள் புறக்கணித்தனர். இது குறித்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று கூறுகையில், ‘‘சில அரசியல் நிர்பந்தம் காரணமாகத்தான் கடைசி நாள் கூட்டத்தொடரை எதிர்க்கட்சி எம்பிக்கள் புறக்கணித்தனர். அதை அவர்களே என்னிடம் தெரிவித்தனர். மற்றபடி, எனக்கும் அவர்களுக்கும் இடையே தனிப்பட்ட எந்த பிரச்னையும் இல்லை. கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும், மக்களவையில்  167 சதவீத அலுவல்கள் நடந்து வரலாறு படைக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 37 மணி நேரத்தை காட்டிலும் 60 மணி நேரம் அவை நடந்துள்ளது,’’ என்றார்.

புதிய நாடாளுமன்றம் பணிகள் தொடங்கின
புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணி தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், ‘‘கட்டுமான பணி தொடங்கி விட்டது. இன்னும் 21 மாதத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் தயாராகி விடும்,’’ என்றார்.

Tags : session ,MPs ,Opposition ,Speaker ,Lok Sabha , Last day meeting Why Opposition MPs Ignored ?: Lok Sabha Speaker's Explanation
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...