×

விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்காமல் இழுத்தடிப்பதாக புகார்: புதிய குடியிருப்புகளுக்கு விரைவான திட்ட அனுமதி வழங்கும் நடைமுறை: அரசு உத்தரவு

சென்னை: பல்வேறு காரணங்களை கூறி திட்ட அனுமதி வழங்காமல்  இழுத்தடிப்பதாக புகார் எழுந்த நிலையில், புதிதாக கட்டப்படும் குடியிருப்புகளுக்கு விரைவான திட்ட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019 உருவாக்கப்பட்டன. இதன் மூலம் வீடுகள் கட்டுவதற்காக அனுமதிக்கப்படும் தளப் பரப்பு அளவு, கட்டிடத்தின் உயரம் மற்றும் கட்டுமான பரப்பு மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஒழுங்குபடுத்தி இந்த விதிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இதன் மூலம்  2500 சதுர அடிக்கு மேற்படாத இடத்தில், அதே சமயம் 1200 சதுர அடி பரப்பளவுக்குள் அமைக்கப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு மட்டும் கள ஆய்வு இல்லாமல்  கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த கட்டிட விதிகள் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது.  இதன் மூலம் விரைவில் திட்ட மற்றும் கட்டிட அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பல்வேறு காரணங்களை கூறி கட்டிட அனுமதி அளிக்காமல் திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது. குறிப்பாக,  2019 விதிகளை பின்பற்றாமல் அதற்கு முன்னர் உள்ள விதிகளை வைத்து காரணம் காட்டி திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி தராமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால், கட்டிடம் கட்டும் பணிகள் முடங்கி போய் உள்ளது. இதுதொடர்பாக  ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, குடியிருப்பு கட்டுமான பணிக்கு திட்ட மற்றும் கட்டுமான அனுமதி வழங்குவதில் தாமதம் கூடாது என்று வீட்டு வசதித்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: குடியிருப்புகளுக்கு கட்டிட அனுமதி விண்ணப்பிக்கும் போது கூடுதல் தகவல் வேண்டும் என்று விண்ணப்பதாரரிடம் கேட்டு பலமுறை திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது. இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

ஒருமுறை விண்ணப்பத்திற்கு சந்தேகம் கேட்டால் கூட மறுமுறை திருப்பி அனுப்பக்கூடாது. சம்பந்தப்பட்ட நபருடன் அதிகாரிகள் அமர்ந்து ஏதாவது  ஆவணங்கள் தேவையென்றால் அதை கேட்டு பெற்றுக்கொண்டு. விரைவாக விண்ணப்பத்துக்கு அனுமதி பெற வேண்டும்.  லே அவுட் அனுமதி நடைமுறையில் திருப்பி அனுப்பாமல் உடனடியாக அனுமதி தர வேண்டும். மேலும், லே அவுட் அனுமதி கொடுத்தவுடன் கள அலுவலர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகு உட்கட்டமைப்பு கட்டணம், மேம்பாட்டுக்கு கட்டணம் உள்ளாட்சி அமைப்புகள் வசூல் செய்ய வேண்டும், இந்த கட்டணம் செல்வதில் தாமதமானால் அதற்கான தாமத கட்டணத்தையும் விண்ணப்பதாரரிடம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Complaint of delay in granting permission for applications: Procedure for granting expeditious planning permission for new flats: Government order
× RELATED புதுச்சேரியில் வன பாதுகாவலர் மீது பாலியல் புகார்