எஸ்.பி.பியின் உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி!...நாளை காலை 11 மணிக்கு தாமரைப்பாக்கத்தில் உடல் நல்லடக்கம்!!!

சென்னை:  எஸ்.பி.பியின் உடல் நாளை காலை 11 மணிக்கு பொன்னேரி அருகே தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய பல்வேறு தரப்பினரும் கூட்டு பிராத்தனை மேற்கொண்டனர். இதனையடுத்து விரைவில் குணமடைந்து எஸ்.பி.பி வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் திரையுலகினர் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும், தலைவருக்கும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்கிடையில் எஸ்.பி.பியின் உடல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல், அஞ்சலிக்காக இன்று இரவு முழுவதும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படுகிறது. இதனால் திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும், பொதுமக்களும் எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு எஸ்.பி.பியின் உடல் பொன்னேரி அருகே தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>