×

அலோபதி டாக்டர்களுக்கு இணையாக இந்திய முறை மருத்துவர்களுக்கும் ஊதிய உயர்வு: அரசு செயலருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அலோபதி டாக்டர்களுக்கு இணையாக இந்திய முறை மருத்துவர்களுக்கும் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்குவது குறித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர் பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை, மதுரை, திண்டுக்கல், வேலூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணியாற்றும் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மற்றும் யுனானி மருத்துவர்கள் 15 பேர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நாங்கள் இந்திய முறை மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மற்றும் யுனானியில் பட்டம் பெற்றுள்ளோம். கடந்த 1989ல் பணியில் நியமிக்கப்பட்டோம். கடந்த 1996 மாநகராட்சி பணி விதிகளின் படி பணியாற்றுகிறோம். இந்திய மருத்துவ முறையின் கீழ் நியமிக்கப்படுவோருக்கு இதுவரையில் பதவி உயர்வோ, ஊதிய உயர்வோ வழங்கப்படவில்லை. கடந்த 26.11.2010ல் வெளியான நகராட்சி நிர்வாக அரசாணையில் அலோபதி டாக்டர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய காலமுறை பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு இதுபோல் எதுவும் வழங்கப்படவில்லை. நாங்களும் அதே நிலையில் மருத்துவர்களாக பணியாற்றுகிறோம்.

எனவே, எங்களுக்கும் ஊதிய உயர்வுடன் கூடிய காலமுறை பதவி உயர்வு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தோம். நகராட்சி நிர்வாக கமிஷனர் எங்களது கோரிக்கை குறித்து அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.ஆனால், அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கடந்த 2010ல் இந்திய முறை மருத்துவர்களும், அலோபதி மருத்துவர்களும் ஒரே விதமான சம்பளம் பெற்றோம். ஆனால், தற்போது அவர்கள் மட்டும் அதிகளவில் சம்பளம் பெறுகின்றனர். 10 ஆண்டுக்கும் மேலாக பதவி உயர்வின்றி, மிக குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகிறோம். பலர் 25 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு: நகராட்சி நிர்வாக கமிஷனரின் பரிந்துரையை தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை செயலர் 3 மாதத்திற்குள் பரிசீலித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பான விபரத்தை மனுதாரர்களுக்கு தெரியபடுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.


Tags : Wage hike ,system doctors ,doctors ,Indian ,Secretary of State ,ICC , Allopathic Doctor, Indian System Physician, Salary, Promotion: Icord
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை