×

64 ஆண்டுகள் பழமையான இந்திய மருத்துவ கவுன்சில் கலைப்பு: இன்று முதல் தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றம்..!!

புதுடெல்லி: 64 ஆண்டுகள் பழமையான  இந்திய மருத்துவ கவுன்சில் இன்றுடன் கலைக்கப்படுகிறது; தேசிய மருத்துவ ஆணையம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. மருத்துவத் துறையில் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வரும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கடந்தாண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி 64 ஆண்டுகளாக செயல்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்பட்டது. இதற்கு மருத்துவ அமைப்புகள், மருத்துவ மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணையத்தின் முதல் தலைவராக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் சுரேஷ் சந்திர ஷர்மா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்றுடன் இந்த கவுன்சில் கலைக்கப்படுகிறது. இதுவரை இந்த கவுன்சில் பார்த்து வந்த பணிகளை நான்கு வாரியங்களாக பிரித்து தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவக் கல்வி, மருத்துவ மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டு வாரியம், மருத்துவ நெறிமுறைகள் மற்றும் மருத்துவ பதிவு வாரியம் ஆகிய நான்கு வாரியங்கள் மருத்துவத்துறையை ஒழுங்குபடுத்தும். தேசிய மருத்துவ ஆணையத்தில் மொத்தம் 29 பேர் உறுப்பினர்களாக இருப்பர். அதில் 20 பேர் நேரடியாக நியமனம் செய்யப்படுவதுடன், 9 பேர் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். அதேபோல், தேசிய மருத்துவ ஆணையத்தின் படி, எம்பிபிஎஸ். படிப்பின் இறுதி ஆண்டில் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (நெக்ஸ்ட்) என்ற பெயரில் பொதுவான தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு முடிவின் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். அத்துடன், எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்த பின்னர் மருத்துவராக பணியாற்றுவதற்கு உரிமம் பெறுவதற்கான தேர்வு, வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயின்ற மாணவர்களுக்கான தர நிர்ணயத் தேர்வாகவும் இது நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Medical Council of India ,National Medical Commission , 64 years old, Dissolution of the Medical Council of India
× RELATED தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக்...