×

எண்ணூர் முகத்துவாரத்தில் ரசாயன கழிவுநீர் கலப்பு : நண்டு, மீன்கள், இறால் அழியும் அபாயம்..!!

சென்னை: எண்ணூர் முகத்துவாரத்தில் ரசாயன கழிவுநீர் விடுவதால் நண்டு, மீன்கள், இறால் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எண்ணூரில் தாழங்குப்பம், நெட்டுகுப்பம், காட்டுகுப்பம் போன்ற பல மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள முகத்துவாரத்தில் மீன், இறால், நண்டுகளை பிடித்து அதன் மூலம் மீனவர்கள், தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எண்ணூர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளின் கழிவுகள், முகத்துவாரத்தில் விடப்படுகிறது. சில நேரங்களில் கழிவுகளுடன் ரசாயனமும் கலந்து வருவதால் ஆறு மாசடைந்து, மீன்கள், இறால், நண்டுகள் செத்து மடிகின்றன. ஆற்றில் மூழ்கி நண்டு, இறால்களை பிடிக்கும் மீனவர்களுக்கும் தோல்  அரிப்பு ஏற்படுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி வருகிறது. முகத்துவார ஆற்றில் ரசாயன கழிவு விடக்கூடாது என மீனவர்களும் சமூக நல அமைப்புகளும் பலமுறை போராட்டம் நடத்தியும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், “எண்ணூர் முகத்துவார ஆற்றை நம்பி ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதால் ஆற்றுநீர் மட்டுமின்றி கடல் நீரும் மாசடைந்து கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. கழிவுகளை நேரடியாக ஆற்றில்விட கூடாது என   நீதிமன்றம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. அதை நடைமுறைப்படுத்தும் வகையில் தொழிற்சாலை ஆய்வாளர்கள், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். ஏற்கனவே வருவாயின்றி வறுமையில் வாடும் மீனவ குடும்பத்தினர் தொழிற்சாலைகளின் அத்துமீறல் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றனர்.

Tags : estuary ,extinction ,Ennore , Ennore, Estuary, chemical sewage mixed
× RELATED பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி வாய்க்கால் சீரமைப்பு