×

தொற்று நோய் அல்லாத நோய்களை கட்டுப்படுத்தியதற்கும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும் கேரள அரசுக்கு ஐ.நா சபை விருது

திருவனந்தபுரம்: தொற்று அல்லாத நோய்களை கட்டுப்படுத்தியதற்கும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்ததிற்கும் கேரள அரசுக்கு ஐ.நா சபை விருது வழங்கி கவுரவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாஸிஸ் விடுத்த அறிவிப்பில், ஐ.நா.வின் யுஎன்ஐஏடிஎப் விருது கேரள அரசுக்கு வழங்கப்படுகிறது. தொற்று அல்லாத நோய்களை கட்டுப்படுத்தியதற்காகவும், தடுப்பு நடவடிக்கைகளைச் சிறப்பாகச் செய்தமைக்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டில் தொற்று நோய் அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் கேரள அரசு செய்த தீவிர நடவடிக்கைகள், மனநல மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் போன்வற்றை அங்கீகரித்து இந்த விருது அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறுகையில், சுகாதாரத் துறையில் ஓய்வின்றி கேரள அரசு உழைத்ததன் அங்கீகாரமாக ஐ.நா இந்த விருதை வழங்கியுள்ளது. மாநிலத்தில் உள்ள அடிப்படை சுகாதார மையம் முதல் அரசு மருத்துவமனைகள் வரை வாழ்க்கை முறை மாற்றத்தால் வரும் நோய்களான இதயநோய்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைப்பழக்கம், குடிப்பழக்கம், புற்றுநோய், போதைமருந்து பழக்கம் என அனைத்துக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. நுரையீரல் தொடர்பான நோய்களுக்கான சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சைக்காக தனித்திட்டம், பக்கவாதத்தை கட்டுப்படுத்தும் திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தினோம். அனைத்தையும் அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தொற்று அல்லாத நோய்களை தடுப்பதில் தீவிரமான அக்கறை காட்டியதால்தான் எங்களால், கொரோனா காலத்தில் பெரும் உயிரிழப்பு வராமல் தடுக்க முடிந்தது என தெரிவித்துள்ளார்.

Tags : Government of Kerala , Government of Kerala, UN, Award
× RELATED நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு...