ஆரம்பித்த வேகத்தில் முடங்கிய நெல்லை - தென்காசி 4 வழிச்சாலை பணி மீண்டும் துவங்குவது எப்போது?

நெல்லை : நெல்லை - தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணி கடந்த 2017ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு தொடங்கிய வேகத்தில் முடங்கியது. இதனால் அவதிப்படும் இரு மாவட்ட மக்கள்,  இப்பணியை மீண்டும் துவங்கி விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

 நெல்லையில்  இருந்து தென்காசி செல்லும் சாலை கேரளாவுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக  உள்ளது. சபரிமலை சீசன், குற்றால சீசன் மற்றும் சுற்றுலா பயணிகள்  செல்லும்  சாலையாக இருந்தாலும் இது இருவழிச்சாலையாகவே உள்ளது. மேலும் அதிக வளைவுகள்  மற்றும் குறுகிய திருப்பங்கள், மேடு பள்ளங்களும் அதிகம் உள்ளன.  இதனால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

 நெல்லையில் இருந்து  48 கிமீ தொலைவில் உள்ள தென்காசிக்கு இச்சாலையில் செல்ல சுமார் 2 மணி நேரத்திற்கு ஆவதால் இதை நான்கு வழிச்சாலையாக மாற்ற மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு விடிவு ஏற்படும் வகையில் கடந்த  2017ம் ஆண்டு உலக வங்கியின்  ரூ.438  கோடி கடனுதவி ஒப்புதலுடன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் 2ல் பணி துவங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன்படி நெல்லை பழையபேட்டை அருகே துவங்கி தென்காசி  நகரின் முன்பகுதி வரை 45.6  கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்க  முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2017ம் ஆண்டு ஆய்வுக் கூட்டங்கள்,  பேச்சுவார்த்தைக்கு பின்னர் நிலஆர்ஜிதம் செய்யப்பட்டது.

இதனையடுத்து ரூ.412 கோடியில் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. கடந்த 2018 ஜனவரி மாதமே பணி துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலதாமதம் ஏற்பட்டது.  இருப்பினும் முதற்கட்டமாக இச்சாலையின் இரு ஓரங்களிலும் வளர்ந்து நிற்கும் மரங்களை வெட்டி அகற்றும் பணி கடந்த 2018ம் ஆண்டு  ஜூனில் துவங்கி 1,500 மரங்களை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்தது.  இதனால் திட்டமிட்டபடி  வருகிற 2020ம் ஆண்டு இறுதிக்குள் இப்பணி நிறைவடையும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் ஏற்பட்டது. சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு சாலையின்  இருபகுதிகளிலும் அடர்ந்து வளர்ந்திருந்த பசுமை மரங்கள் புல்டோசர், பொக்லைன்  உதவியுடன் அகற்றப்பட்டன. ஆனால், ஒரு மாதமே நடந்த இப்பணிகள் திடீரென  நிறுத்தப்பட்டன.

 இப்பணி நடந்த போது ஒப்பந்தக்காரர் வீடு,  அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதை அடுத்து அவரது வங்கிக்  கணக்குகளும் முடக்கப்பட்டன. இதனால் தொழிலாளர்களுக்கு சம்பளம்  கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை இந்த டெண்டரை ரத்து செய்தது. மீண்டும்  மறு டெண்டர் விடப்பட்டு அதனை எடுக்கும் ஒப்பந்தக்காரர் மூலம் பணி தொடரும்  என தெரிவிக்கப்பட்டது.ஆனால் சுமார் 10 மாதம் கடந்த நிலையில் புதிய  ஒப்பந்தக்காரர் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் இல்லை.  மறு டெண்டர்  விடப்படாததால் ஆரம்பத்தில் துவங்கிய பணி 1 மாதத்திலேயே முடங்கியது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 நான்கு வழிச்சாலை பணி குறித்து கடந்த ஆண்டு நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தினர் கூறுகையில், நிறுத்தப்பட்ட   4 வழிச்சாலை திட்டப்பணி நிச்சயம் தொடரப்படும். கடந்த பாராளுமன்ற தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வந்த பின்னர் இது   தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து மறு டெண்டர் விடும். அதனைத் தொடர்ந்து   புதிய ஒப்பந்தகாரர் மூலம் பணியைத் துவங்கி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விரைந்து  முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்றனர். ஆனால், அத்தேர்தல் முடிந்தும் ஓராண்டு கடந்துவிட்டது. தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

நெல்லை- தென்காசி சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் இரு மாவட்ட மக்கள்,   இப்பணியை மீண்டும் துவங்கி விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர  வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

இரு மாதத்தில் துவங்க வாய்ப்பு

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தினர் கூறுகையில், ‘‘பணி நிறுத்தப்பட்டு பழைய டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டது. சுமார 2 ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய மதிப்பீட்டின்படி புதிய நபருக்கு ஒப்பந்தம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதிய நிதி உலக வங்கி நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும். இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முடிந்துள்ளன. அடுத்த 2 மாதங்களில் ஒப்பந்தகாரர் மூலம் பணி தொடங்க ஏற்பாடு செய்யப்படும்’’ என்றனர்.

தகவல் அறியும் சட்டத்தில் விளக்கம்

நெல்லை- தென்காசி 4 வழிச்சாலை குறித்து தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராம உதயசூரியன், பல்வேறு கேள்விகளை தகவல்அறிவும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். அதற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட பொதுதகவல் அலுவலர் தனசீலன் பதிலளித்துள்ளார். அதன் விவரம்: கடந்த 2013-14ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்தசாலை பணிக்கான அறிவிப்பு தமிழக முதல்வரால் வெளியிடப்பட்டது.

கடந்த 19.9.2014 அன்று இச்சாலைப்பணிக்காக ரூ.480.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்டம் II மூலம் பொது மற்றும் தனியார் பங்களிப்புமுறையில் உலகவங்கியின் கடனுதவியுடன் மேம்படுத்தப்பட உள்ளது. திருநெல்வேலியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தொடங்கி தென்காசிவரை 45.60 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் சாலையின் அகலம் 24 மீட்டர்முதல் 35 மீட்டர் வரை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 அனைத்து இடங்களிலும் சமஅளவில் சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இந்தசாலையில் பாவூர்சத்திரத்தில் 990 மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. பாவூர்சத்திரம், ஆலங்குளத்தில் சாலைகளின் ஓரத்தில் 5 மீட்டர் முதல் 5.50 மீட்டர் வரை அகலத்தில் அணுகு சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

ஒப்பந்ததாரர்கள் தேவையான தகுதியை அடையாத காரணத்தால் மறுஒப்பந்தம் கோரப்பட்டு ஆவணம் ஆய்வில் உள்ளது. இரண்டாம் முறையாக கடந்த 20.11.2019-ல் ஒப்பந்தம் கோரப்பட்டது. ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் சாலைப்பணி தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு கடந்த 12ம் தேதி பதிலளித்துள்ளார்.

இருப்பினும் புதிய ஒப்பந்தம் கோரப்பட்டு 10 மாதம் முடிந்த நிலையில் ஆவணம் ஆய்வில் உள்ளதாகவே பதில் தரப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டம் எப்போது துவங்கப்படும் என்பதற்கான சரியான விடை தெரியாமல்  பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Related Stories:

>