×

16 மொழிகளில் 45,000 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்து வந்த பாதை!!

சென்னை: ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம் என்கிற எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கொண்டம்பட்டியில் 1946, ஜூன் 4ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஹரிகதா கலைஞர். 2 சகோதரர்கள் மற்றும் 5 சகோதரிகள் கொண்ட பெரிய குடும்பம். இவர்களில் எஸ்.பி.சைலஜா, தென்னிந்திய மொழிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சில படங்களில் நடித்திருக்கிறார்.

எஸ்.பி.பிக்கு வயது 74. சாவித்திரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாவித்திரி, சில நாட்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார். மகள் பல்லவி, மகன் எஸ்.பி.பி.சரண் உள்ளனர். இவர்களில் எஸ்.பி.பி.சரண் பாடகராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார்.

இளம் வயதிலேயே பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்க தேர்ச்சி பெற்ற எஸ்.பி.பி., ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் வாசிப்பதில் கைதேர்ந்தவராக இருந்தார். தனது மகன் இன்ஜினீயராக வேண்டும் என்பது தந்தையின் ஆசையாக இருந்தது. இதனால் எஸ்.பி.பி., அனந்தபூர் ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அப்போது டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், தனது இன்ஜினீயரிங் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, பிறகு சென்னையிலுள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். அப்போது கல்லூரியில் நடந்த இசைப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றார். மெல்லிசைக்குழு ஒன்றையும் நடத்தினார். அதில் பங்குபெற்றவர்களில் இளையராஜா மற்றும் அவரது சகோதரர்கள் ஆர்.டி.பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அவர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளிலும், நாடகம் மற்றும் கச்சேரிகளில் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்த எஸ்.பி.பி., சினிமாவில் பின்னணி பாடகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்போது அனைத்து மொழி படங்களும் சென்னையில் தயாராகி வந்ததால், இங்கேயே தங்கி சினிமா வாய்ப்பு தேடினார். 1966ல் ஒரு தெலுங்கு படத்தில் பாடகராக அறிமுகமானார். தமிழில் அவர் முதலில் பாடிய படம், ஓட்டல் ரம்பா. இதில் ௭ம்.௭ஸ்.விஸ்வநாதன் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து, அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலை பாடினார். ஆனால், சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை.

பிறகு ஜெமினி கணேசன் நடித்த சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம்பெற்ற இயற்கை எனும் இளைய கன்னி என்ற பாடலை பாடினார். ஆனால், இப்படம் ரிலீசாவதற்கு முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் படம் வெளியாகி, அதில் அவர் பாடிய ஆயிரம் நிலவே வா என்ற பாடல் முதல் பாடலானது. 1960களின் பிற்பகுதியில் தமிழ்ப் படவுலகில் அறிமுகமான எஸ்.பி.பி., தொடர்ந்து 60 ஆண்டுகளாக முன்னணி பாடகராக இருந்தார். 16 மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். 6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். அவர் முறைப்படி கர்நாடக இசை பயின்றது இல்லை என்றாலும், சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் இடம்பெற்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதை 4 மொழிகளுக்கு பெற்ற ஒரே பாடகர் எஸ்.பி.பி என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.பி பாடகர் மட்டுமின்றி, தென்னிந்திய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 45க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். டப்பிங் கலைஞராகவும் இருந்தார். கமல்ஹாசன் தமிழில் நடித்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட 120க்கும் மேற்பட்ட படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். தொடர்ந்து ரஜினிகாந்த், சல்மான்கான், கே.பாக்யராஜ், மோகன், அனில் கபூர், கிரீஷ் கர்னாட், ஜெமினி கணேசன், அர்ஜூன், நாகேஷ், கார்த்திக், ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப் படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டபோது, மொத்தம் 10 கேரக்டர்களில் 7 கேரக்டர்களுக்கு (பெண் கேரக்டருக்கும் சேர்த்து) டப்பிங் பேசினார்.

சிறந்த டப்பிங் கலைஞருக்கான ஆந்திரா மாநில அரசின் நந்தி விருதுகளை பெற்றுள்ள எஸ்.பி.பி., தெலுங்கில் இருந்து தமிழில் வெளியான ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற படத்துக்காக பாலகிருஷ்ணாவுக்கு டப்பிங் பேசியிருந்தார். பன்முகத்திறமை கொண்ட எஸ்.பி.பிக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்தது. 2016ல் 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய திரைப்பட சாதனையாளர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. பலமுறை தமிழக அரசின் விருதுகளை பெற்றுள்ள அவர், ஆந்திரா அரசின் நந்தி விருதை 25 முறை பெற்று சாதனை படைத்துள்ளார். 1981ல் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.

2015ம் ஆண்டுக்கான கேரள அரசின் ஹரிவராசனம் விருதும் அவருக்கு கிடைத்துள்ளது. இதுவரை எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை எஸ்.பி.பி செய்துள்ளார். 1981 பிப்ரவரி 8ம் தேதி பெங்களூருவில் உள்ள ஒலிப்பதிவுக்கூடத்தில், கன்னட இசை அமைப்பாளர் உபேந்திர குமாருக்காக காலை 9 முதல் இரவு 9 மணி வரை, ஒரேநாளில் 21 பாடல்களை பாடி சாதனை படைத்தார். அதுபோல், தமிழில் ஒரேநாளில் 19 பாடல்களையும், இந்தியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும்பாடி சாதனை படைத்துள்ளார்.

விருதுகள் 1983ல் தெலுங்கில் கே.விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான சாகர சங்கமம் என்ற படத்துக்காக இளையராஜாவுக்கும், எஸ்.பி.பிக்கும் தேசிய விருது கிடைத்தது. 1988ல் தெலுங்கில் வெளியான ருத்ரவீணா என்ற படத்துக்காக மீண்டும் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது. சங்கராபரணம் என்ற படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். எஸ்.பி.பி முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்கவில்லை என்றாலும், கேள்விஞானத்தை வைத்து அனைத்து பாடல்களையும் பாடினார். அதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. பிறகு 1981ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ஏக் துஜே கே லியே என்ற படத்துக்காக தேசிய விருது பெற்றார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான மின்சார கனவு என்ற படத்தில் இடம்பெற்ற தங்கத்தாமரை மகளே என்ற பாடலுக்காக, தேசிய விருதை 6வது முறையாக பெற்றார். கன்னடத்தில் அம்சலேகா இசையில் பாடியதற்காகவும் தேசிய விருது பெற்றுள்ளார்.

Tags : Guinness World Record ,SB Balasubramaniam , SBP, Corona
× RELATED எஸ்.பி.பாலசுப்ரமணியம் 3ம் ஆண்டு நினைவு...