×

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் காணொலியில் தொடங்கியது

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இடைக்கால தலைவர் ஜெயின் தலைமையில் காணொலியில் தொடங்கியது. மேகதாதுவில் காவிரியாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன் பங்கேற்றுள்ளனர். கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., நீர் வழங்க, கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாத வாரியாக வழங்க வேண்டிய நீரின் அளவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதை கண்காணிப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியத்தை ஜல்சக்தி துறையின் கீழ், மத்திய அரசு கொண்டு வந்ததால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஜல்சக்தி ஆணையத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்தது ஒரு நிர்வாக நடவடிக்கை ஆகும். காவிரி நீர் ஆணையம் முறைப்படுத்தும் குழு நடவடிக்கை அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags : meeting ,Cauvery Management Commission , Cauvery Management Commission Meeting, Cauvery, Meghadhathu
× RELATED வறட்சி நீடித்து வருவதால்...