திருப்பத்தூர் அருகே நூறுநாள் திட்ட வேலையின்போது 17ம் நூற்றாண்டு வீரன் கற்சிலை கண்டெடுப்பு

*வருவாய் ஆய்வாளரிடம் ஒப்படைப்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் அருகே நூறு நாள் வேலை திட்டத்தில் பள்ளம் தோண்டும்போது, இரண்டு அடி  உயரத்தில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த வீரன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் அடுத்த   ஆண்டியப்பனூர் அருகே குண்டுரெட்டியூர் கிராமத்தில் உள்ள ஓடைப்பகுதியில் நேற்று  தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் வேலை செய்துவந்தனர். அப்போது அங்கு கடப்பாரையால் பள்ளம் தோண்டும்போது வினோத சத்தம் கேட்டது.

அந்த இடத்தை தோண்டிப்பார்த்தபோது சுமார்  15 செ.மீ. உயரம், 9 செ.மீ. அகலம்  கொண்ட இரண்டு அடி உயரமுள்ள கையில் ஆயுதங்கள் ஏந்திய கற்சிலை ஒன்று கிடைத்தது. அந்த சிலையை  அரசிடம் ஒப்படைக்கச் சொல்லி அதே கிராமத்தைச் சேர்ந்த ஊர்கவுண்டர் மணி   ஆண்டியப்பனூர் வருவாய் ஆய்வாளரிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து திருப்பத்தூர் வரலாற்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் பிரபு கூறியதாவது: இந்த கல் சிற்பம் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நடுகற்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 அதில் இந்த சிலை தற்போது வினோதமான சிலையாக உள்ளது. இதில் போர்வீரன் போருக்கு தயாராகி கொண்டிருப்பது போலவும் அதில் அந்த வீரன் காலில், கவச குண்டலமும், கையில் காப்பு, காதில் குண்டலம், அணிந்து உள்ளார். இந்த போர்வீரன் போருக்கு சென்றதற்காகவும் வீரமரணம் அடைந்து அவரின் நினைவாக சிற்பம் செதுக்கி அரண்மனை உள்ளிட்ட பகுதிகளில் வைத்திருக்கும் வீரனுடைய சிற்பம் என்பது ஆய்வுகளில் தெரிய வருகிறது. இதனை தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பின்புதான் இது எதற்காக பயன்படுத்தப்பட்டது என்று தெரியவரும்.

மேலும் இந்த குண்டு ரெட்டியூர், மிட்டூர், சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் நடுகற்களும் உள்ளது.  கீழடி போன்ற ஆராய்ச்சி சிற்பங்களும் இங்கு அடிக்கடி கிடைத்து வருகிறது. எனவே அரசு கீழடி தொல்பொருள் ஆராய்ச்சி போல இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டால் பல திடுக்கிடும் தகவல்களும் வரலாற்று சிற்பங்களும் கண்டறியலாம்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த சிலை தற்போது வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, வேலூர் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>