×

விஜயகாந்துக்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை கோளாறு காரணமாகவும், கொரோனா பரவல் காரணமாகவும் கடந்த சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்தார். இந்தநிலையில், தேமுதிகவின் 16வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜயகாந்த் கட்சி கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், விஜயகாந்திற்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து,  மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் இரவு நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, தேமுதிக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரிசெய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல்நலத்துடன் உள்ளார்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மியாட் மருத்துவமனை அறிக்கை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோவிட் 19 சோதனையில் கொரோனா தொற்று இருப்பது செப்டம்பர் 22ம் தேதி உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதற்கிடையில் விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி எப்படி வந்தது என்றே தெரியவில்லை். அவர்  இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்று பிரேமலதா கூறியுள்ளார்.

Tags : Corona ,Vijaykanth ,hospital , Corona to Vijaykanth: Admission to a private hospital
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...