ஆன்லைன் தேர்வு கோரி தொடக்க கல்வி ஆசிரியர் தேர்வு எழுத வந்த மாணவர்கள் போராட்டம்: லேடி வெலிங்டன் கல்லூரியில் பரபரப்பு

சென்னை: ஆன்லைன் தேர்வு கோரி தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு எழுத வந்த மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் லேடி வெலிங்டன் கல்லூரி முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனாவால், கல்லூரி மாணவர்களின் இறுதி தேர்வு மற்றும் பருவ தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு மட்டும் நேரடியாக நடத்தப்படுகிறது. இதனால் ெகாரோனா தொற்று ஏற்படும் நிலை உள்ளது. அதேநேரம் மற்ற மாணவர்கள் போல் எங்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு எழுத தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று தேர்வு எழுதும் மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், அரசு நேரடியாகத்தான் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதன்படி நேற்று சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவர்கள் வந்திருந்தனர். தேர்வு எழுதுவதற்கு முன்பு தொடக்க கல்வி பட்டய பயிற்சி தேர்வு மாணவர்கள் திடீரென எங்களுக்கும் மற்ற மாணவர்கள் போல் ‘ஆன்லைன் தேர்வு’ வேண்டும் என்று தேர்வு நடைபெறும் கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழக அரசு மற்ற தேர்வுகள் போல் தொடக்க கல்வி பட்டயப்பயிற்சி தேர்வும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வு மையத்தில் இருந்த கல்வி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழக அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாணவர்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு தேர்வு எழுத மையத்திற்கு சென்றனர். மாணவர்களின் போராட்டத்தால் சிறிது நேரம் லேடி வெலிங்கடன் கல்லூரி முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: