×

தமிழகத்தில் ஊரடங்கு முடியும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் 29ம் தேதி ஆலோசனை: தியேட்டர்கள் திறப்பது குறித்து அறிவிக்க திட்டம்

சென்னை: தமிழகத்தில் 8வது கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி வருகிற 29ம் தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, அக்டோபர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதி உள்ளிட்ட புதிய தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம்தேதி முதல் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனினும் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 8வது கட்ட ஊரடங்கு வருகிற 30ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதைத்தொடர்ந்து அக்டோபர் 1ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பது. கூடுதலாக புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், வருவாய் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். அப்போது, தமிழகத்தில் அக்டோபர் மாதம் 1ம் தேதியில் இருந்து தியேட்டர்களை திறக்க அனுமதி அளிப்பது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அப்படி, தியேட்டர்களை திறந்தால் என்ன நடவடிக்கைகள் கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும்,  கோவை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதுபற்றியும் விவாதிக்கப்படும். இதுதவிர, தற்போது கடைகள் திறக்கும் நேரம் இரவு 8 மணி என்று இருப்பதை இரவு 9 மணி வரை அனுமதிப்பது, பள்ளிகள் திறப்பது, சென்னையில் மின்சார ரயில்களை இயக்க மத்திய அரசிடம் கேட்டுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தளர்வுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட உள்ளது.

முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29ம் தேதி காலை சென்னை,  தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து மாவட்ட  கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

Tags : Chief Minister ,Tamil Nadu ,theaters , Chief Minister consults with medical expert panel on end of curfew in Tamil Nadu on 29th
× RELATED ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சரின் திட்டம் திடிரென ரத்து