எஸ்.பி.பி கவலைக்கிடம்: கமல்ஹாசன் மருத்துவமனை வருகை

சென்னை: கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆகஸ்டு 5ம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (வயது 74). அவருக்கு எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 15ம் தேதி திடீரென்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.  இதையடுத்து வெளிநாட்டு மருத்துவர்கள் ஆலோசனைப்படி அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக, கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்த 5ம் தேதி தனது 51வது திருமண நாளையொட்டி, மனைவி சாவித்திரி கொண்டு வந்த கேக்கை வெட்டி எஸ்.பி.பி திருமண நாள் கொண்டாடினார்.

தொடர்ந்து 50 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:  கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் மருத்துவர்கள் அவருக்கு  ெதாடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக படிப்படியாக முன்னேறி வந்த எஸ்.பி.பி உடல்நிலையில் ஏற்பட்டுள்ள திடீர் பின்னடைவு, இந்திய திரையுலகினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு எஸ்.பி.பியை நேரில் பார்த்து நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், முகக்கவசம் அணிந்து உள்ளே சென்றார். பிறகு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’உயிர் காக்கும் கருவிகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. எஸ்.பி.பி குடும்பத்தார் அவர்கள் நம்பும் இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது. கவலைக்கிடமாக இருக்கிறார்” என்றார்.

Related Stories:

>