×

வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணம்

மும்பை: ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரரும், பிரபல வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் (59) நேற்று மாரடைப்பால் காலமானார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடரின் 13வது சீசன் வர்ணனையாளர் குழுவில் இடம் பெற்றிருந்த டீன் ஜோன்ஸ், மும்பையில் உள்ள குழுவினருடன் இணைந்து பணியாற்றி வந்தார். தெற்கு மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அவர், நேற்று காலை 11.00 மணியளவில் ஐபிஎல் போட்டிக்கான வர்ணனை பணி குறித்து சக ஊழியர்களுடன் ஆலோசித்த பின்னர் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை ஆம்புலன்சில் ஏற்றி ஹர்கிசன்தாஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் டீன் ஜோன்ஸ் கடுமையான மாரடைப்பு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். ஜோன்சின் எதிர்பாராத மரணம் கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு வீரர்கள், பிசிசிஐ, ஐசிசி மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஸ்டார் இந்தியா நிர்வாகிகள், ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணிக்காக ஜோன்ஸ் விளையாடிய 52 டெஸ்டில் 3631 ரன் (அதிகம் 216, சராசரி 46.55, சதம் 11, அரை சதம் 14) மற்றும் 164 ஒருநாள் போட்டியில் 6068 ரன் (அதிகம் 145, சராசரி 44.61, சதம் 7, அரை சதம் 46) விளாசியுள்ளார்.

* பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரில் இஸ்லாமாபாத் யுனைடட் அணியின் பயிற்சியாளராகவும், ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றி உள்ளார். ஒருமுறை வர்ணனை செய்தபோது ‘கேட்ச் பிடித்த ஹாசிம் அம்லாவை (தென்ஆப்ரிக்கா) ‘பயங்கரவாதிக்கு ஒரு விக்கெட் கிடைத்து விட்டது’ என்று சொன்னதால் சர்ச்சையில் சிக்கியவர். அதற்காக பின்னர் மன்னிப்பும் கேட்டார்.
* இந்தியாவின் பண்பாடும், உணவும் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக அடிக்கடி கூறி வந்த டீன் ஜோன்ஸ் உயிரும் இந்தியாவிலேயே பிரிந்துள்ளது.

* டிஎன்சிஏ இரங்கல்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (டிஎன்சிஏ) கவுரவ செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘கிரிக்கெட் உலக ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் மறைவுக்கு டிஎன்சிஏ ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. சென்னையில் டையில் முடிந்த ஆட்டத்தில், உடல் நலக் குறைவுக்கு இடையில் அவர் அடித்த இரட்டை சதம் என்றும் மறக்க முடியாதது. தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் மிகபபெரிய ஆதரவாளராகவும், வர்ணனையாளராகவும் டீன் ஜோன்ஸ் இருந்துள்ளார்’ என்று கூறியுள்ளார்.

Tags : Dean Jones , Commentator Dean Jones dies of heart attack
× RELATED வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளர் மாரடைப்பால் காலமானார்...