×

குமரியில் கொரோனா எண்ணிக்கை குறைகிறது: நாகர்கோவிலில் 728க்கு 11 பாசிட்டிவ்

நாகர்கோவில்: குமரியில் மார்ச் மாதம் கொரோனா தடுப்பு முன்கெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்பத்தில் 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என உத்தேசமாக  கணக்கிடப்பட்டது. இதில் 5 ஆயிரம் பேருக்கு அவசர சிகிச்சை அளிக்கும் வகையில், தனியார் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் வரை தயார் நிலையில் வைக்கப்பட்டன. இதற்கிடையே மார்ச் 24ல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் மாதம்  குமரியில்  வெளிமாநிலங்களில் இருந்து வந்த மற்றும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்த 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் நலமுடன் திரும்பினர்.

இந்நிலையில் ஜூன் மாதம் இ பாஸ் மூலம் வந்தவர்கள் என வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் எண்ணிக்கை மெதுவாக அதிகரிக்க தொடங்கியது. திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் மற்றும் மண்டலங்கள் இடையே பொது போக்குவரத்து தொடங்கிய நிலையில் ஜூலை மாதம் குமரியில் கொரோனா தாக்கம் வேகம் எடுக்க தொடங்கியது. 175க்கு மேற்பட்டவர்கள் தொற்றால் கண்டறியப்பட்டனர். இந்நிலையில் நாடு முழுவதும் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. திருமணங்கள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 6 மாதங்களுக்கு பின்னர் 85 சதவீதம் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பஸ்களில் சமூக இடைவௌியின்றியே பயணிகள் பயணம் செய்கின்றனர். திருமண வீடுகள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் முன்பு போல் அதிகளவு கூட்டத்துடன் நடைபெற்று வருகின்றன. இதனால்,கொரானா தொற்று அதிகரிக்குமோ என அச்சப்பட்ட நிலையில், தற்போது கொரோனா தொற்றின் வேகம் கணிசமாக குறையத் தொடங்கியுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் சராசரியாக 750 பேர் வரை கொரோனா தொற்று சோதனை நடத்தப்படுகிறது. இதில்25 பேர் சராசரியாக தொற்று இருப்பது உறுதிப் படுத்தப்பட்ட நிலையில், கடந்த வாரம் முதல் இந்த எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை 728 பேருக்கு பரிசோதனை செய்ததில் 11 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மாநகர் நல அலுவலர் கின்ஷால் கூறியதாவது, கொரோனா தொற்று ஏற்பட்ட மார்ச் மாதம் முதல், இதனை பரவாமல் தடுக்க அரசு அறிவுறுத்தலின் படி மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இதுவரை தொய்வின்றி தடுப்பு பணிகள் செய்து வருகிறோம். தற்போது கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆறுதலை தருகிறது. எனினும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது நடமாடும் மையங்கள் மூலமும் கோவிட் 19 பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றார்.

கவனம் அவசியம்
இதுபற்றி  சுகாதாரத்துறை இணைஇயக்குநர் ஜான் பிரிட்டோ கூறியதாவது, குமரியில் 3  இடங்களில் கோவிட் 19 சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சராசரியாக 1800 முதல்  2000ம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதில் 9.5 சதவீதம்  பாசிட்டிவ் ஆகும். இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், கடந்த வார சராசரி 7.2 ஆக குறைந்துள்ளது. எனினும் மக்கள் அலட்சியம் காட்டாமல், தொடர்ந்து சமூக  இடைவெளி, முககவசம் அணிதல், கைகளை சானிட்டைசர் அல்லது சோப் மூலம் கழுவுதல் தொடர்ந்து கடைபிடித்தால் மட்டுமே இன்னமும் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும். டெங்கு போன்ற காய்ச்சல்கள் கொசுக்கள் மூலம்  பரவுவதால், அவற்றை சுகாதார நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்தி விடலாம்.  ஆனால் கோவிட் தொற்று கண்ணிற்கு தெரியாமல், மனிதர்கள் மூலம் சக  மனிதர்களுக்கு பரவும் என்பதால், மிகுந்த முன்னெச்சரிக்கை அவசியம்.

42 லட்சத்தில் நவீன கருவிகள்
*  ஜான் பிரிட்டோ மேலும் கூறியதாவது, கொரோனா பாதிப்பின் போது ஆக்சிஜன்  தட்டுபாடு வராமல் இருக்க கலெக்டர் பிரசாந்த் வடநேரேயின் ஆலோசனைப்படி,  ரூ.10.50 லட்சம் மதிப்பீட்டில், லிக்விட் ஆக்சிஜன் யூனிட் தக்கலை அரசு  மருத்துவமனையில பொருத்தப்பட்டுள்ளது.
* இதுபோல் எக்ஸ்ரே  பிலிம்கள் டெவலப் செய்து கொண்டு வரும்போது கூட தொற்று பரவலாம் என்பதால்,  ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் டிஆர் எக்ஸ்ேர கருவி தக்கலை அரசு  மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எக்ஸ்ரே எடுத்த உடன் அதன்  காட்சி வைபை மூலம் டாக்டரின் லேப்டாப்பிற்கு வந்து விடும். இதனை பார்த்து,  பாதிப்பை டாக்டர்கள் கண்டறிய முடியும்.

* தனியார்களிடம் பல  ஆயிரம் செலவில் செய்யும் பயோ கெமிக்கல் சோதனைகளை அரசு மருத்துவமனையில்  மேற்கொள்ளும் வகையில் தக்கலை மாவட்ட அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சம்  மதிப்பீட்டில் முழு ஆட்டோ அனலைசர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. கொரோனா   பரிசோதனைக்கும் இதற்கும் தொடர்பு இல்லாவிட்டாலும், சிறுசீரக, கல்லீரல்  போன்ற உயிர் காக்கும் உறுப்புகளின் செயல்பாடு பற்றி அறிந்து உரிய சிகிச்சை  அளிக்க முடியும் இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வு மையங்களில் கிருமிநாசினி தெளிப்பு
குமரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க  தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், 12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதற்காக தனித் தேர்வு நடைபெறும் மையங்களில், மாநகராட்சி மாநகர் நலப்பிரிவு சார்பில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Tags : Corona ,Kumari ,Nagercoil , Corona number drops in Kumari: 11 positive to 728 in Nagercoil
× RELATED அரசியல் கட்சிகள் பணம் கொண்டு வருவதை...