தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து எல்.கே.சுதீஷிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்..!!

சென்னை: கொரோனா பாதிப்பால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து அவரது மைத்துனன் சுதீஷிடம் தொலைபேசி மூலமாக நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று கடந்த 22ம் தேதி உறுதி செய்யப்பட்டதாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைந்து அவரது இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டிருந்தனர். குறிப்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் முக ஸ்டாலின், நடிகர்கள் சரத்குமார் மற்றும் திரைத்துறையினர் என பலரும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனன் சுதீஷிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். விஜயகாந்தின் உடல்நிலை தற்போது எவ்வாறு உள்ளது, அவருக்கு எவ்வகையிலான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதா? என்பது குறித்தும் நலம் விசாரித்தார். இதையடுத்து, அவரது  விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது மைத்துனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், ரஜினி தரப்பில் இருந்து கேட்டு கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று தெலங்கானா ஆளுநர் தமிழிசையும் விஜயகாந்த் நலம் பெற வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சரத்குமாரைத் தொடர்ந்து நடிகர் ராதரவி விஜயகாந்த் விரைவாக குணமடைய வாழ்த்தியுள்ளார்.

Related Stories: