புதுச்சேரியில் கலைப்பொருட்கள் விற்கும் மையத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை!: உரிய ஆவணம் இல்லாத 74 சிலைகள் பறிமுதல்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் கலைப்பொருட்கள் விற்கும் மையத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டதில் உரிய ஆவணம் இல்லாத 74 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரியில் ரோமண்ட் ரோலன்ட் வீதி என்ற பகுதி முக்கிய நகரமாக பார்க்கப்படுகிறது. அப்பகுதியில் வெளிநாட்டவர் வந்து செல்லும் வகையில் உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களை ஈர்க்கும் வகையில் கலைப்பொருட்களை விற்கும் மையங்களும் அதிகளவில் உள்ளன. குறிப்பாக புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை அலுவலகம் எதிரில் உள்ள தனியார் கட்டிடத்தில் கலைப்பொருட்கள் விற்கப்படுகின்றன. இப்பொருட்களை காண வரும் பார்வையாளர்கள் பலர், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பல சிலைகள் கலைப்பொருட்கள் விற்கும் மையத்தில் இருப்பதாக தமிழக அரசுக்கு புகார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் தமிழகத்தை சேர்ந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. சக்திவேல் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தியதில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 74க்கும் மேற்பட்ட சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து சிலைகள் தொடர்பான உரிய ஆவணங்கள் மற்றும் விவரங்களை அளிக்க உத்தரவிட்ட போலீசார், சட்டவிரோதமாக கடத்திய 74 சிலைகளை பறிமுதல் செய்தனர். புதுவையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக உப்பளம் பகுதியில் அரசு விளையாட்டு மையத்திற்கு எதிராக உள்ள தனியார் கட்டிடத்தில் இதனை போலவே உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட சிலைகளை அப்போது பொறுப்பில் இருந்த பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>