×

கிராம மக்கள் கொடையாளர் முயற்சியால் தனியாருக்கு இணையாக அரசு தொடக்க பள்ளி

திருமயம்: அரிமளம் அருகே கிராம மக்கள் கொடையாளர்கள் முயற்சியால் தனியார் பள்ளிக்கு இணையாக செயல்படும் அரசு தொடக்க பள்ளி அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது விறுவிறுப்பாக மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கைக்குளயான்வயல் ஊராட்சி கரையப்பட்டி ஆரம்ப பள்ளி 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து சாதரண அரசு பள்ளியாக செயல்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை குறைந்து வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கிராமபுற மாணவர்கள் தனியார் பள்ளிக்கு செல்லாமல் கரையப்பட்டி தொடக்க பள்ளியில் சேர முயற்சி மேற்கொண்டனர். இதற்கு பள்ளியின் தரத்தை உயர்த்துவதே சிறந்தது என்று எண்ணிய கிராம மக்கள் பள்ளியில் தரத்தை உயர்த்த நன்கொடை பெறுவது என முடிவெடுத்து பள்ளியை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதற்கு பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் திருமால்பாண்டியன், உதவி ஆசிரியர் விஜயராஜ் ஆகியோரின் முயற்சிக்கு கரையப்பட்டி, அம்புராணி, கப்பத்தான்பட்டி ஆகிய கிராம மக்கள், இளைஞர்கள் உறுதுணையாக இருந்தனர். இதன் ஒரு பகுதியாக பள்ளி கட்டிடங்களை மராமத்துப் பணிகள் செய்து, பெஞ்ச்,டெஸ்க், ப்ரொஜெக்டர், லேப்டாப், இன்வெக்டர், ஆடியோ சிஸ்டம், போன்ற தனியார் பள்ளிகளில் உள்ளதை போன்ற உபகரணங்களை பள்ளி முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், தொழில் அதிபர்கள், ஆகியோரின் நிதி உதவியால் ரூ.4 லட்சத்து 21 ஆயிரம் செலவில் அரசு பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

மேலும் பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் மாணவர்கள் கண்கவர் வகையில் பல வண்ண கலர்களால் பூச்சுகள் பூசப்பட்டதொடு தரை தலங்கள் வண்ண பெயிண்டு அடிக்கப்பட்டது. சுவர்களில் மாணவ, மாணவியர்களை கவரும் வண்ணம் பல்வேறு விதமான பொம்மை ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது. இதனிடையே கடந்த கல்வி ஆண்டில் 1ம்வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 25 குழந்தைகளுடன் செயல்பட்டு வந்தநிலையில் 2020-21ம் கல்வி ஆண்டில் 5ம் வகுப்பு முடித்து 6 மாணவர்கள் வெளியேறி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது பள்ளியின் தரத்தை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் தனியார் பள்ளிகளில் படித்து வந்த தனது குழந்தைகளை கரையப்பட்டி அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனனர். இதனால் தற்போது பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் நிலையில் கிராம மக்களின் முயற்சியால் அரசு பள்ளி தரம் உயர்ந்ததோடு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

Tags : Primary School ,village , Government Primary School
× RELATED ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்...