×

கொரோனா காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு

சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் ஏராளமான குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. திருமணம் செய்ய ஆண்களுக்கு 21 வயதும், பெண்களுக்கு 18 வயதும் குறைந்தபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் பல ஆண்டுகளாக 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. மாவட்ட நிர்வாகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், சமூக நல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியன குழந்தை திருமண தடுப்பு குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு அவ்வப்போது குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன.

பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் குழந்தை திருமணங்கள் குறித்து கிராமத்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. தற்போதும் கிராமங்களிலேயே தொடர்ந்து குழந்தை திருமணங்கள் நடந்து வருகின்றன. கொரோனா பரவாமல் தடுக்க கடந்த மார்ச் இறுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் ஏராளமான பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளன. பெரும்பாலும் உறவுகளுக்குள்ளேயே அதிகமான குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இத்திருமணங்கள் குழந்தை திருமணம் என்ற தகவல் மிக ரகசியமாக வைக்கப்படுகிறது.

உறவுகள் யாரும் இது குறித்து வாய் திறப்பதில்லை. திருமணம் நடத்தும் உறவுகளுக்குள் முன் விரோதம் உள்பட வேறு பிரச்னைகள் இருந்தால் மட்டுமே குழந்தை திருமண தகவல் வெளியில் வருகிறது. இதனால் குழந்தை திருமணம் என்பது வெளியில் தெரிவதில்லை. குழந்தை திருமணங்களில் பெண்களே 18 வயதிற்கு குறைவானவராக உள்ளனர். குழந்தை திருமணங்கள் நடத்தப்படுவது பாலியல் வன்கொடுமையின் கீழ் கடுமையான வழக்காக பதிவு செய்யப்படுகிறது. இதனால் திருமணம் செய்த அல்லது செய்ய இருந்த ஆண், கடுமையான வழக்கு பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார். இருப்பினும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை.

குறைந்த விழிப்புணர்வு

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பள்ளிகளில் 10ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படிப்பை கைவிட்டு இடைநிற்கும் மாணவிகளை கணக்கிட்டால் அதில் பெரும்பாலான மாணவிகளின் இடை நிற்றலுக்கு காரணம் திருமணம் என்பது தெரிய வரும். ஆண்டுதோறும் ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் 2 மாணவிகள் முதல் 5 மாணவிகள் வரை இதுபோல் இடை நிற்கின்றனர். தற்போதைய கொரோனா பாதிப்பு காலத்தில் குடும்ப சூழலால் இதுபோன்ற திருமணங்கள் மேலும் அதிகரித்துள்ளது. தற்போது எல்லாம் மாறி விட்டது என்ற நோக்கிலேயே குழந்தை திருமணங்களுக்கு எதிரான பிரச்சாரங்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறைந்து விட்டன. ஆனால் அவைகளை அதிகப்படுத்த வேண்டிய நிலையே உள்ளது. புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுப்பது என்பதால் மட்டும் இத்திருமணங்களை தடுக்க முடியாது’’ என்றார்.

Tags : Corona , Corona, child marriages
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...