×

திருச்சி, தஞ்சை, திருவாரூரில் வேளாண் மசோதா நகல் எரித்து விவசாயிகள் போராட்டம்!!

திருச்சி, :மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டாவில் இன்று பல இடங்களில் போராட்டம் நடந்தது. திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் வேளாண் மசோதா நகலை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சின்னதுரை, மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை ரயில் நிலையம் முன் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நிர்வாகி வைகறை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் இந்திய ஜனநாயக கட்சியினர், எஸ்டிபிஐ கட்சியினர் பலர் கலந்துகொண்டு வேளாண் சட்ட மசோதா நகலை எரித்து கோஷமிட்டனர்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பஸ்நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலளர் சிவாஜி தலைமை வகித்தார். மாநில அரசியல் குழு மோட்சகுணவழகன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொருளாளர் தங்க முருகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஒரத்தநாடு கடைத்தெருவில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் சட்ட மசோதா நகல் எரிக்கும் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் திராளாக கலந்துகொண்டு வேளாண் சட்ட மசோதா நகலை எரித்தனர்.புதுக்கோட்டை கீழராஜவிதியில் எஸ்டிபிஐ கட்சி நகர தலைவர் முகமது அலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மன்னார்குடி பெரியார் சிலை முன், காவிரி உரிமைக் குழு சார்பில் தலைமை ஆலோசகர் பாரதி செல்வன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நகலை எரித்தனர்.

Tags : Trichy ,Thiruvarur ,Tanjore , Trichy, Tanjore, Thiruvarur, Agriculture Bill, copy, farmers, struggle
× RELATED நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்