×

தனியார் கோழிப்பண்ணையில் இருந்து கிராமங்களுக்கு படையெடுக்கும் ஈக்களால் நோய் பரவும் அபாயம்

க.பரமத்தி: க.பரமத்தி அடுத்த துலுக்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையிலிருந்து அதிகளவில் ஈக்கள் உருவாகி பல்வேறு கிராமத்திற்குள் செல்வதால் தொற்று நோய்கள் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஊர்பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியம் நடந்தை ஊராட்சி துலுக்கம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை சுமார் 18 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த கோழிப்பண்ணையில் சமீப காலமாக அதிகளவில் ஈக்கள் உருவாகி அருகில் உள்ள 30 மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வீடுகளில் உள்ள பொருட்களை மொய்க்கின்றன. ஈக்கள் மொய்த்த உணவு பண்டங்களை பெண்கள், குழந்தைகள் சாப்பிடும் போது வாந்தி, பேதி ஏற்பட்டு பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகி உள்ளதாக அப்பகுதியினர் குறை கூறுகின்றனர்.

இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அப்பகுதி கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரவி, ஒன்றியக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி கருப்புசாமி ஆகியோரிடம் புகார்களை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரவி, ஒன்றியக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி கருப்புசாமி முயற்சியாலும், அதிகாரிகள் நடவடிக்கையாலும் ஈக்கள் வருவதை கட்டுக்குள் வைத்து கட்டுப்படுத்தினர். இந்நிலையில் மீண்டும் ஈக்கள் உருவாக ஆரம்பித்ததால் கடந்த ஒரு மாத காலமாக ஈக்களால் பெரும் இன்னல்களுக்கு ஆளாவதாகவும் இது குறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல அதிகளவில் ஈக்கள் உருவாகி கட்டுப்படுத்த கோழிப்பண்ணை நிர்வாகம் தவறியதால் சுற்று பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள், அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து முற்றுகையிட்டு மிக பெரிய போராட்டங்கள் நடத்திய பிறகு ஈக்கள் உருவாவதை கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆனால் தற்போது ஈக்கள் வீடுகளுக்குள் நுழைந்து பொருள்கள் மீது மொய்க்கிறது. இதனால் பல சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இனியாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். தவறும் பட்சத்தில் இது குறித்து மீண்டும் ஒருமுறை மாவட்ட கலெக்டரின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஊர்பொதுமக்கள் ஒன்று கூடி மனு அளித்து விட்டு போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம் என்றனர்.

Tags : villages ,poultry farms , private poultry, risk of disease transmission
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு